புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி,
“ஒத்தக் கருத்துடைய கட்சிகள் ஓரணியில் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால், டி.டி.வி தினகரனையோ, ஓ.பி.எஸ்-ஸையோ சேர்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறாரா என்பதை அவர் கொடுத்துள்ள பேட்டியிலேயே பார்த்துக் கொள்ளுங்கள். இதிலிருந்து அவர்களுக்குள் ஒத்தக் கருத்து இல்லை என்பது தெரிகிறது. பியூஸ் கோயல் அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்காக வருகிறார். அவருக்கு தமிழ்நாட்டுடைய அரசியல் தட்பவெட்ப நிலை தெரியாது. அதனால், நிச்சயமாக அவர் நினைப்பது தமிழ்நாட்டில் நடக்காது. எத்தனை முனை போட்டிகள் நடந்தாலும் தி.மு.க-வை வீழ்த்த முடியாது. சாக்குப் போக்கு சொல்வதற்காக நயினார் நாகேந்திரன் இரு முனைப் போட்டி என்பதை முன்வைத்திருக்கிறார். எத்தனை முனை போட்டி வந்தாலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள இந்த ஐந்தாண்டு கால சாதனை தி.மு.க கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை நிச்சயம் பெற்று தரும். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக சொல்லிவிட்டார். தலைவர் மு.க ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதலமைச்சர் ஆக்குவது தான் எனது கடமை, என்னுடைய பணி என்று தெளிவாக சொல்லிவிட்டார். இதிலிருந்து, முதலமைச்சருக்கான போட்டியில் உதயநிதி இல்லை, தி.மு.க தலைவரை முதலமைச்சராக ஆக்குவதற்கு தான் அவர் தேர்தல் களத்தில் மும்முரமாக பணிபுரிகிறார்.
எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஐயாயிரம் ரூபாய் கொடுத்து இருக்கலாம். கொடுக்காமல் இருந்திருக்கலாம். நாங்கள் தற்பொழுது இதைப் பற்றி சொல்ல மாட்டோம். என்ன என்பது ரகசியமாகத்தான் இருக்கும். திடீரென்று தான் அறிவிக்கப்படும். ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பது பா.ஜ.க-வின் கொள்கை. எங்களின் கொள்கை அல்ல. திருப்பரங்குன்றத்தில் சிக்கந்தர் தர்கா இருக்கிறது. தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் விழா தான். அதற்கு வழிபாடு செய்ய அனுமதி கொடுப்பது தவறில்லை. திருப்பரங்குன்றம் பிரச்னையை இதுவரை யாரும் எழுப்பியதாக வரலாறு கிடையாது. முதல்முறையாக தமிழ்நாட்டில் கால் ஊன்ற வேண்டும் என்பதற்காக, எதைச் சொல்லி மக்களை திசை திருப்பலாம் என்பதற்காக பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ்-ஸோடு சேர்ந்து போட்ட திட்டம். அது இன்று தோல்வி அடைந்துள்ளது. தமிழ்நாடு மக்கள் விழிப்புணர்வு உள்ளவர்கள். அவர்களுக்கு எது சரி எது தவறு என்பது தெரியும். இ ஃபைலிங் முறை என்பது விரைந்து அந்த பணியை செய்வதற்காகவும், இருந்த இடத்திலிருந்து வழக்கை ஃபைல் செய்ய முடியும் என்பதற்காகவும் கொண்டுவரப்பட்டது. தற்போது, அனைத்து இடத்திலேயுமே ஆன்லைன் இ-ஃபைலிங் தான் இருக்கிறது. நீதிமன்ற விசாரணை கூட காணொளி காட்சி மூலமாக நடக்கிறது. இ ஃபைலிங் முறையில் தாமதம் ஏதும் இருப்பது தெரிய வந்தால் அது கண்டறியப்பட்டு அந்த தாமதத்தை நீக்குவதற்கான நடவடிக்கையை அரசு செய்யும். இ ஃபைலிங் முறையை நீதிமன்றம் வழக்கறிகளுக்காக கொண்டுவந்துள்ளது. நீதிமன்றம் இ ஃபைலிங் முறையை கொண்டு வந்துள்ளதால் அதில் அரசு கருத்து சொல்ல இயலாது.