விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மல்லாக்கிணறு தனியார் மண்டபத்தில் திமுக வடக்கு மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளரும் தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசு கலந்து கொண்டு கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, டிசம்பர் 4ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்கும் ஏற்பாடுகள் மற்றும் வாக்காளர் சீரமைப்புப் பணிகள் தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றன. இதில் தி.மு.க மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் தேர்தலை முன்னிட்டு மாற்றமடைந்து வருகிறது. எந்தக் கூட்டணி யாருடன் சேருகிறது என்பது குறித்து பல ஊகங்கள் பேசப்பட்டாலும், தி.மு.கவிற்குக் கவலையில்லை” என்று அவர் தெரிவித்தார்.
“எந்தக் கூட்டணி யாருடன் சென்றாலும் எங்களுக்குக் கவலையில்லை. நரி வலம் வந்தாலும், இடம் சென்றாலும் நமக்குத் தொடர்பில்லை. முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அமைக்கும் கூட்டணியே எப்போதும் வெற்றிக் கூட்டணியாக இருந்து வந்துள்ளது; இனியும் அதுவே வெற்றிக் கூட்டணியாக இருக்கும்” என்று அவர் உறுதியாக கூறினார்.