மதுரை: எந்த ஒரு மொழியையும் திணிக்க மத்திய அரசுக்கு அதிகாரமோ, உரிமையோ கிடையாது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். மதுரை மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று நடைபெற்ற சிறப்பு குறைதீர் முகாமுக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:
மும்மொழிக் கொள்கையைக் கொண்டுவந்து 57 ஆண்டுகளாகியும், எந்த மாநிலத்திலும் முழுமையாக அமல்படுத்த முடியவில்லை. இருமொழிக் கொள்கையைப் பின்பற்றும் தமிழகம், தேசிய சராசரியைவிட சிறப்பான நிலையை அடைந்துள்ளது.
முற்றிலும் தோல்வி அடைந்த மும்மொழிக் கொள்கை மாடலை தமிழகத்தில் திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. வெற்றி அடைந்த நமது மாடலை எடுத்துவிட்டு, தோல்வியடைந்த மாடலை பின்பற்றச் சொன்னால் என்ன அர்த்தம்? அறிவுள்ளவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா?
உத்தரப் பிரதேசம், பிஹார், மத்தியப் பிரதேச மாநிலங்களில் இருமொழிக் கொள்கையை அமல்படுத்தியிருந்தால் மூன்றாவது மொழியே தேவைப்படாது. 2-வது மொழியாக ஆங்கிலத்தை ஒழுங்காகக் கற்றுக் கொடுத்திருந்தாலே ஆங்கிலம் அனைவருக்கும் நன்றாகத் தெரிந்திருக்கும்.
எந்த ஒரு மொழியையும் திணிக்க மத்திய அரசுக்கு அதிகாரமோ, உரிமையோ கிடையாது. 2-வது மொழியைக் கற்றுத்தர முடியாதவர்கள், 3-வது மொழியைப் படிக்கச் சொன்னால் ஏற்க முடியுமா? இவ்வாறு பழனிவேல் தியாகராஜன் பேசினார்.