அப்போது அவர், “ரஹ்மானின் உயரம் ரொம்ப ரொம்ப மேல இருக்கு சார். அவர் மியூஸிக் போல என்னுது இருக்குன்னு சொல்றீங்கன்னா டெக்னிக்கல் விஷயங்களில் நான் பொஃபெக்டா இருக்கறதுதான் காரணம்னு நினைக்கிறேன்.
மற்றபடி யாருடைய சாயலும் இருக்கக்கூடாது என்பதுதான் என் எண்ணம். நான் ரஹ்மானிடம மட்டும் வேலைபார்க்கவில்லை. நான்கு மொழிகளில் நாற்பது மியூசிக் டைரக்டர்களிடம் வேலை பார்த்திருக்கிறேன்.
எல்லோரிடமிருந்தும் பல விஷயங்களைக் கற்றிருக்கிறேன். எனது பன்னிரண்டு வருட உழைப்புக்குக் கிடைத்திருக்கும் உயர்வு இது. பன்னிரண்டு வயசிலேயே மியூஸிக் பக்கம் வந்துட்டேன். என் அப்பா ஒரு கிடாரிஸ்ட், அம்மா பாடகி சின்ன வயசிலேயே போர்டு வாசிக்க ஆரம்பித்துவிட்டதால், படிப்பில் கவனம் செல்லவில்லை.
பாடப் புத்தக நோட்ஸுகளைவிட மியூஸிக்கல் நோட்ஸ்தான் எனக்கு உற்சாகம் தந்தது. ஸ்கூல் படிப்பு முடிச்சேன். காலேஜ் போக ஆர்வமில்லை. படிப்பை மூட்டைகட்டி வெச்சிட்டு முழுநேரமும் மியூஸிக்ல இறங்கிட்டேன்.

”மின்னலே’ பாடல் களைக் கேட்டபிறகு பத்துப் பன்னிரண்டு பேர் வந்தார்கள். நான் ரொம்ப யோசித்து நாலே நாலு படம் ஒப்புக்கொண்டிருக்கிறேன். கிடுகிடுவென்று படங்களை ஏற்றுக் கொள்வதைவிட தேர்ந்தெடுத்துச் செய்யலாம் என்பது என் திட்டம்.” எனக் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து அவரிடம், “கிராமிய இசைக்கு இளையராஜா, கானாவுக்கு தேவா, மாடர்ன் இசைக்கு ரஹ்மான் என்று ஆளுக்கு ஒரு ஏரியாவில் அசத்து றாங்க… நீங்க எப்படி?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் தந்த ஹாரிஸ் ஜெயராஜ், ”இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கேன். அதுக்குள்ளே இப்படி ஒப்பீடு செய்யறது சரியா வராது. ஒரு விஷயம் மட்டும் நிச்சயம்… எனக்கு மெலடி தான் ஸ்ட்ராங்கான ஏரியா. அதில் நிறைய அசத்த முடியும்.” என்றிருக்கிறார்.