
காவல் துறையினரால் மேற்கொள்ளப்படும் என்கவுண்டர் நடவடிக்கைகளில் உயிரிழப்பு ஏற்படும் ஒவ்வொரு சம்பவங்கள் தொடர்பிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும், அது தொடர்பில் சிஐடி அல்லது வேறு காவல் துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது.
இது குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு, என்கவுண்டர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டிய கடுமையான குற்றங்கள் தொடர்பிலான தகவல்கள் காவல் துறையினருக்கு ஒவ்வொரு முறையும் கிடைக்கும் போதெல்லாம் அது தொடர்பில் காவல் துறையினர் எழுத்திலோ அல்லது எலக்ட்ரானிக் உபகரணத்திலோ பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் மரண தண்டனை அரிதிலும் அரிதான வழக்குகளில்தான் வழங்கப்படுகிறது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கும் உடனடியாக தண்டனை நிறைவேற்றப்படுவது கிடையாது.
ஆனால் ஆண்டுதோரும் பலர் எனகவுண்டர் எனப்படும் மோதல் நடவடிக்கைகளில் கொல்லப்படுகின்றனர். என்கவுண்டர்கள் பல காவல்துறையால் போலியாக கட்டமைக்கப்படுவதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டுகின்றன.