ஸ்ரீவில்லிபுத்தூர்: ‘தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) யார் வந்தாலும் சேர்த்துக்கொள்ள தயாராக இருக்கிறோம்’ என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (அக்.12) மதுரையில் தொடங்குகிறார். இதையொட்டி நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நயினார் நாகேந்திரன் தரிசனம் செய்தார். பாஜக மாநில துணைத்தலைவர் கோபால்சாமி, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் சரவணதுரை ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரவேண்டும் என ஆண்டாள் சந்நிதியில் வேண்டினேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். பாஜக சார்பில்நான் நாளை (இன்று) மதுரையில் பிரச்சார பயணத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். பேரணி மதுரையில் தொடங்கினாலும் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, இங்கிருந்தே எனது பயணத்தைத் தொடங்குகிறேன். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும்.
அதிமுக மீது தினகரன் விமர்சனம்: அதிமுக மீது டிடிவி.தினகரனுக்கு என்ன வெறுப்பு என தெரியவில்லை. என் மீதும் வெறுப்புடன்தான் பேசினார். அவர்களது சொந்த பிரச்சினைக்காக கட்சிகளைப் பற்றி தவறாகப் பேசக் கூடாது என்பது என் கருத்து. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு யார் வந்தாலும் சேர்த்துக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஜனவரி மாதத்தில் கூட்டணி இறுதி வடிவம் பெறும்.கூட்டணி பலமாக உள்ளதால் திமுகதான் ஆட்சி அமைக்கும் என்கிற வதந்தி தமிழகத்தில் பரவி வருகிறது. அதைப் பொய்யாக்கி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.