என்டிஏ தொகுதி பங்கீடு: பாஜக 27,பாமக 18, அமமுக11 இடங்கள் ஒதுக்கீடு , அதிமுக 178 இடங்களில் போட்டி? – Kumudam

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 30 நாட்களே உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு ஒருவழியாக இறுதி வடிவம் பெற்றுள்ளது. நீண்ட இழுபறிக்குப் பிறகு, பாஜக மற்றும் தோழமைக் கட்சிகளுடன் சுமுக உடன்பாடு எட்டப்பட்டு, தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழக அரசியல் களத்தில் ஆளும் திமுக கூட்டணியை எதிர்கொள்ள, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் டெல்லியில் அமித்ஷாவுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து, இன்று சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முன்னிலையில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டது. இதன்படி, அதிமுக 170 தொகுதிகளில் நேரடியாகக் களம் காண முடிவெடுத்துள்ளது.

பியூஸ் கோயல் வருகையும் அரசியல் மாற்றமும்

தொகுதிப் பங்கீட்டை உறுதி செய்ய இன்று காலை சென்னை வந்த பியூஸ் கோயல், செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக மக்கள் மாற்றத்திற்குத் தயாராகிவிட்டனர்; திமுக – காங்கிரஸ் கூட்டணி மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்” என்று தெரிவித்தார். தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வப் பட்டியல் இன்று வெளியான நிலையில், அடுத்த சில நாட்களில் வேட்பாளர் பட்டியலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலை 2.30 மணியளவில் அதிமுக அலுவலகத்திற்கு பியூஸ்கோயல், எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் வருகை தந்தனர். 

10 ஆண்டுகளுக்கு பிறகு டிடிவி 

அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் நீக்கப்பட்ட பிறகு, இன்றைய தினம் 10 ஆண்டுகளுக்கு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். இதே போன்று அன்புமணி, ஜான்பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி  தலைவர்களும் அதிமுக அலுவலகத்திற்கு வருகை தந்து இருந்தனர். 

தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கியக் கட்சியான பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமக 18 தொகுதிகளிலும், டிடிவி தினகரனின் அமமுக 11 தொகுதிகளிலும் போட்டியிட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த முன்று கட்சிகளுக்கு 56 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜான் பாண்டியன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளார்.தற்போது அதிமுக வசம் 178 தொகுதிகள் உள்ளன.  இதில் வாசன், பாரி வேந்தர்,  ஏசி சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *