“என்னங்க விஜய்க்கு வந்த சோதனை ” சட்டமன்ற தேர்தல் முடியும் வரை ஜனநாயகன் நோ ரீலிஸ் – Kumudam

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி போகிறது. இப்படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு தற்போது ரத்து செய்துள்ளது.

கே.வி.என். புரொடக்‌ஷன் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கைக்காக விண்ணப்பிக்கப்பட்டது. படத்தை ஆய்வு செய்த தணிக்கை வாரியக் குழுவினர், அதில் மதம் மற்றும் நாட்டின் பாதுகாப்புப் படைகள் தொடர்பான சில சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கருதினர். இதனால், படத்திற்கு நேரடியாகச் சான்றிதழ் வழங்காமல், அதனை மறுஆய்வுக் குழுவின் பரிசீலனைக்குப் பரிந்துரை செய்தனர்.

தணிக்கை வாரியத்தின் இந்த முடிவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, தணிக்கை வாரியத்தின் பரிந்துரை செல்லாது என்றும், படத்திற்கு உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், “இந்த வழக்கில் தணிக்கை வாரியத் தரப்பு தனது வாதங்களை முன்வைக்கத் தனி நீதிபதி முறையான கால அவகாசம் வழங்கவில்லை” என்று சுட்டிக்காட்டப்பட்டது. இதன் அடிப்படையில், படத்திற்குச் சான்றிதழ் வழங்கச் சொல்லி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தற்போது இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதி அமர்வுக்கே நீதிபதிகள் மாற்றியுள்ளனர். “ஜனநாயகன்” பட விவகாரத்தை மீண்டும் முதலில் இருந்து விசாரித்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் புதிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வு ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் ‘ஜனநாயகன்’ படத்தின் வெளியீடு மேலும் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது.

அதுமட்டுமின்றி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால், ஜனநாயகன் படத்திற்கு தேர்தல் ஆணையம் தடைபோடும் நிலை ஏற்படும். ஏனென்றால் தவெக தலைவராக விஜய் இருப்பதால் அது தேர்தல் பிரசாரமாக அமைந்துவிடும் என்பதால் தேர்தல் ஆணையம் தடை போடவும் வாய்ப்புள்ளது. அதனால் சட்டமன்ற தேர்தல் வரை ஜனநாயகம் படம் வெளியாக வாய்ப்பு குறைவு. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *