`என்னது ரூ.1.3 லட்சத்தில் 50 கிமீ மைலேஜுடன் RE பைக்கா?' – ஹைபிரிட், எலெக்ட்ரிக்னு ராயல் அப்டேட்ஸ்!

Spread the love

ராயல் எ-ன்ஃபீல்டின் ‛டபு டுபு’ எனும் அந்த எக்ஸாஸ்ட் பீட்டே கொஞ்சம் ‛நச்’சென்று மனதில் நிற்கத்தான் செய்யும். ஆனால், பராமரிப்பு – மைலேஜ் என்று வரும்போது ‛ப்ச்’ கொட்டத்தான் வேண்டும். 

இந்தக் குறையைச் சரிக்கட்டத்தான் ராயல் என்ஃபீல்டு ஒரு முடிவு கட்டப் போகிறது. ஆம், ஒரு 250 சிசி பைக் ஒன்றின் வேலைப்பாட்டில் ரகசியமாக ராயல் என்ஃபீல்டு இறங்கியிருப்பதாகத் தகவல். சொல்லப்போனால், இது கொஞ்சம் பழைய நியூஸ்தான். போன ஆண்டு 2025 மே மாதமே ராயல் என்ஃபீல்டு அந்த 250 சிசி பைக்கைக் கொண்டு வரப்போவதாகச் சொன்னார்கள். இப்போது மீண்டும் பேச்சு அடிபடுகிறது.

அது ஒரு ஹைபிரிட் பைக் என்பதுதான் ஸ்பெஷல். யமஹா போன்ற நிறுவனங்கள் எப்போதோ ஹைபிரிட்டில் இறங்கிவிட்டன. இப்போது ராயல் என்ஃபீல்டும் ஹைபிரிட் ப்ளாட்ஃபார்மில் கை வைக்கப் போகிறது. இதற்காக அவர்கள் CFMoto எனும் சீன ஆட்டோமொபைல் உற்பத்தியாளருடன் கூட்டு வைக்கப் போவதாக ஏற்கெனவே தகவல் வந்திருந்தது. இதன் Code Name கூட V என்பதாகத் தகவல். சென்னைத் தொழிற்சாலையில்தான் இது தயாரிக்கப்படப் போவதாகவும் தகவல். 

இந்தியாவில் இப்போது டூவீலர்களுக்குக் கடுமையாகப் பின்தொடரப்படும் BS-6 Phase-2 எமிஷன் ஸ்டாண்டர்டு மற்றும் CAFE (Corporate Average Fuel Efficiency) போன்ற நார்ம்ஸ்களுடன் ஒத்துப் போக வேண்டும். அதற்காகத்தான் இவ்வளவு காலதாமதம் என்கிறார்கள். 

CFMoto bike

‛என்னது, சீனக் கம்பெனியோட பார்ட்னர்ஷிப்பா’ என்று உச் கொட்டத் தேவையில்லை. ஜம்மென்ற மோட்டார் பைக்குகள், ஆல் டெரெயின் வாகனங்கள், 250 முதல் 800 சிசி இன்ஜின்கள் வரை ரெடி செய்வதில் எக்ஸ்பெர்ட் இந்த CFMoto. இந்த CFMoto நிறுவனத்தின் இன்ஜின்கள் காம்பேக்ட் ஆனவை, நல்ல மைலேஜ் கொடுக்கக் கூடிய அளவில் ஹைபிரிட் இன்ஜீனியரிங்குடன் Fuel Efficient-க்குப் பெயர் பெற்றவை. இப்போதைக்கு இந்த CFMoto-வின் இன்ஜினுடன்தான் வருமா? மைல்டு ஹைபிரிட்டா அல்லது ஸ்ட்ராங் ஹைபிரிட் இன்ஜினில் இந்த 250 சிசி பைக் வருமா என்று தெரியவில்லை. ஆனால் இது ஒரு ப்ளக்-இன் ஹைபிரிட் எலெக்ட்ரிக் பைக்காக இருக்காது. எப்படி இருந்தாலும் 50 கிமீ மைலேஜ் என்பது உறுதி என்று சொல்லப்படுகிறது. 

CFMoto bike

ஹைபிரிட் என்பதால் இதில் ஸ்டார்ட் – ஸ்டாப் தொழில்நுட்பம் இருக்கும். எக்ஸ்ட்ரா டார்க் அசிஸ்ட்டுக்கு சின்ன எலெக்ட்ரிக் மோட்டாரும் கொடுத்திருப்பார்கள். 

இது ஹன்ட்டர் 350-க்குக் கீழே பொசிஷன் செய்யப்படப் போகிறது. அதனால் இதன் எக்ஸ் ஷோரூம் விலை வெறும் 1.30 லட்சத்துக்குள் இருக்கலாம். இந்த V பைக் வந்தால், இதுதான் ராயல் என்ஃபீல்டின் அதிக மைலேஜ் தரப் போகும், விலை குறைவான பைக்காக இருக்கும். 

அடுத்து எலெக்ட்ரிக்கிலும் ராயல் என்ஃபீல்டு ப்ளக் சொருகப் போவது உங்களுக்குத் தெரியும். அப்படியே அந்த Flying Flea C6 எலெக்ட்ரிக் பைக் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ராயல் என்ஃபீல்டில் இருந்து வரும் எலெக்ட்ரிக் வாகனங்களை இந்த Flying Fleaதான் மேற்கொள்ளும். ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் துணை பிராண்டாக இயங்கப் போவதுதான் ஃப்ளையிங் ஃப்ளியா (Flying Flea). இதிலிருந்து C6, S6 எனும் 2 எலெக்ட்ரிக் பைக்குகள் வரப்போவதாக ஏற்கெனவே சொல்லியிருந்தோம்.

FLying Flea

அதென்ன ஃப்ளையிங் ஃப்ளியா? 

இரண்டாம் உலகப் போரின்போது, பிரிட்டிஷ் ராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்ட ஒரு பைக்கின் பெயர்தான் ஃப்ளையிங் ஃப்ளியா. அதை இன்ஸ்பயர் செய்துதான் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள். ராயல் என்ஃபீல்டு நிறுவனம், ஏற்கெனவே 3 ஆண்டுகளுக்கு முன்பு Electrik 01 என்கிற கான்செப்ட் மாடல் பைக் ஒன்றைக் காட்சிப்படுத்தி இருந்தது. அது ஒரு மாதிரியான பாபர் ஸ்டைல் பைக். சிங்கிள் சீட்தான் அதில் இருக்கும். அதில் பழைய மாடலான Girder Fork இருந்தது. அதாவது, இப்போதிருக்கும் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளை விடப் பழைய மாடல் அது. இந்த எடை குறைந்த கிர்டர் ஃபோர்க்தான், இந்த C6 பைக்கின் ஹைலைட்டே! இதன் அலுமினியம் ஃப்ரேமும் இந்த லைட்வெயிட் பைக்கின் இன்னொரு சிறப்பம்சம்! 

லோ ஸ்லங் க்ரூஸர் ஸ்டைலில் இருக்கும் இந்த பைக்கில் சிங்கிள் சீட்தான் இருப்பதால், சோலோ ரைடர்களுக்கு இது மிகவும் பிடிக்கும். காதலர்களுக்கு ஏற்றபடி டூயல் சீட் ஆப்ஷனும் கிடைக்கும்படிதான் இது மார்க்கெட்டுக்கு வரும் என்றும் தெரிகிறது. இது 120 கிலோ எடைக்குள் ஹேண்ட்லிங் பக்காவாக இருக்கும் என்று தெரிகிறது. C6-க்கு பெல்ட் டிரைவும், S6-க்கு செயின் டிரைவும் இருக்கும்.

FLying Flea

இந்த C6 பைக்கின் Primary Vehicle Control Unit (PVCU) மொத்தமாக இன்டர்நெல்லாக டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பைக்கின் பேட்டரி மற்றும் மோட்டார் போன்ற டெக்னிக்கல் விவரங்கள் இன்னும் பெரிதாகச் சொல்லப்படவில்லை. ஆனால் கார்னரிங் ஏபிஎஸ், க்ரூஸ் கன்ட்ரோல், ட்ராக்ஷன் கன்ட்ரோல் போன்ற எலெக்ட்ரானிக் சமாச்சாரங்கள் இதில் நிச்சயம் உண்டு.

கூடவே, நம் வீட்டில் நார்மலாகப் போடக்கூடிய 3 பின் பிளக் பாயின்ட்டில் இதை சார்ஜ் போடும்படியான கட்டமைப்பில்தான் இந்த C6 வரப்போகிறது. எல்இடி லைட்டிங் மற்றும் டிஜிட்டல் டிஸ்ப்ளே, மொபைல் ரியல்டைம் கனெக்டிவிட்டி வசதிகள், Qualcomm’s Snapdragon QWM2290 சிப்செட் போன்றவை இருக்கும். அதாவது – நம் மொபைல் போனையே சாவியாகப் பயன்படுத்தும் தொழில்நுட்பமும் இதில் வரும். டச்ஸ்க்ரீன் TFT டிஸ்ப்ளே, புது ஸ்விட்ச் கியர்கள், ஆஃப்ரோடுக்கு ஏற்ற லாங் டிராவல் சஸ்பென்ஷன், ஒல்லியான ஸ்போக் வீல்கள், டூயல் பர்ப்பஸ் டயர்கள், பென்ச் ஸ்டைல் சீட் என ஒரு மாதிரி க்ளாஸியாக வரப் போகிறது C6. லடாக்கில் இந்த இ-பைக்கை டெஸ்ட் டிரைவெல்லாம் முடித்துவிட்டார்கள். இது 2026 நடுவில் வெளிவந்துவிடும் என்று தெரிகிறது. இது 2 – 3 லட்சம் விலையில் இருக்கலாம். இதுபோக ஹிமாலயனில் 750 சிசி பைக் டெஸ்ட் ரைடு போய்க் கொண்டிருப்பதாகவும் தகவல்.

C6-ல் 5 ரைடிங் மோடுகளும் உண்டு. அது சரி; ராயல் என்ஃபீல்டு என்றாலே அந்த ‛டபு டுபு டபு டுபு’ எக்ஸாஸ்ட் பீட்தான். அதை மிஸ் செய்வீர்கள்தானே!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *