மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் மற்றும் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகத் தங்கத்தின் விலை நிலையற்ற தன்மையில் உள்ளது. வாரத்தின் தொடக்கத்தில் விலை கணிசமாகக் குறைந்த நிலையில், தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. அந்த வகையில் இன்று காலை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 அதிகரித்துள்ளது.
இந்த வாரம் திங்கள்கிழமை தங்கம் விலை இருமுறை சரிந்து ரூ. 1,01,360-க்கு விற்பனையானது. ஆனால் அன்றைய தினமே மீண்டும் உயர்ந்து ரூ. 1,06,720-ஐ எட்டியது. செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் முறையே ரூ. 1,06,000 மற்றும் ரூ. 1,08,800 என விற்ற தங்கம், நேற்று முன்தினம் வியாழக்கிழமை சற்று குறைந்து ரூ. 1,06,800-க்கு விற்பனையானது. நேற்று உயர்வுக்குப் பிறகு, ஒரு கிராம் தங்கம் ரூ. 13,430-க்கும், ஒரு சவரன் ரூ. 1,07,440-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள போதிலும், வெள்ளியின் விலை நேற்று கணிசமாகக் குறைந்தது. கிலோவுக்கு ரூ. 15,000 குறைந்துள்ள நிலையில், ஒரு கிராம் வெள்ளி ரூ. 245-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 2,45,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. போர் சூழல் மற்றும் பொருளாதாரக் காரணிகளால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் திரும்புவதால் இந்த விலை மாற்றங்கள் நிகழ்வதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,09,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,660க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.250-க்கும், கிலோ ரூ.5000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,50,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வார கடைசி நாளான இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்து இருப்பது நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
