என்னய்யா திருப்பதிக்கு வந்த சோதனை :  அப்போ லட்டு, இப்ப சால்வை அடுத்தடுத்து அம்பலமாகும் ஊழல்: பக்தர்கள் அதிர்ச்சி  – Kumudam

Spread the love

திருப்பதி கோயில் நிர்வாகம் வி.ஐ.பி.க்கள், முக்கிய நன்கொடையாளர்கள் மற்றும் ₹3,000 டிக்கெட் வாங்கும் பக்தர்களுக்கு மரியாதை நிமித்தமாகச் சால்வை போர்த்தி ஆசிர்வாதம் அளிப்பது வழக்கம். இந்தச் சால்வைகள் ரங்க நாயக மண்டபத்தில் வேத பண்டிதர்களால் போர்த்தப்படும். 

இந்தச் சால்வைகளை விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தத்தை எடுத்திருந்த நிறுவனங்கள், ஒப்பந்தப் புள்ளியில் தெளிவாகக் கோரப்பட்ட தூய மல்பெரி பட்டுச் சால்வைகளுக்குப் பதிலாக, விலையில் மிகவும் மலிவான 100% பாலியஸ்டர் துணியால் ஆன சால்வைகளை அளித்துள்ளனர். 

ஒப்பந்ததாரர் ஒரு சால்வைக்கு ரூ.1,389 என அதிக விலைக்குப் பில் போட்டிருக்கிறார். ஆனால், வழங்கப்பட்ட பாலியஸ்டர் சால்வையின் உண்மையான சந்தை விலை வெறும் ₹350 மட்டுமே ஆகும். இதன்மூலம், ஒரு சால்வைக்கு ₹950-க்கும் மேல் மோசடி செய்யப்பட்டு, கடந்த பத்து ஆண்டுகளில் தேவஸ்தான அறக்கட்டளைக்கு மொத்தமாக ₹54 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 

இந்தச் சால்வைகளின் தரம் குறித்து சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, தேவஸ்தானத் தலைவர் பி.ஆர். நாயுடு அளித்த புகாரின் அடிப்படையில் ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்திற்குரிய சால்வைகளின் மாதிரிகள் மத்தியப் பட்டு வாரியம் உட்பட இரண்டு ஆய்வகங்களுக்குப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. 

பரிசோதனை முடிவில், இவை பட்டு அல்ல, முற்றிலும் பாலியஸ்டர் துணியே என்பது திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்பட்டது. இது தேவஸ்தானத்தின் கொள்முதல் மற்றும் டெண்டர் ஒப்பந்த நெறிமுறைகளை அப்பட்டமாக மீறும் செயலாகும்.ஊழல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனான அனைத்து டெண்டர்களும் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, விரிவான குற்றவியல் விசாரணைக்கு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே உண்டியலில் வெளிநாடு பணம் திருட்டு, லட்டில் கலப்பட நெய் என பல்வேறு சர்ச்சைகளில் திருப்பதி கோயில் சிக்கி வருகிறது. இந்தச் சால்வை ஊழல் முபக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *