“என்னை இந்த அரசு திட்டமிட்டு கொல்லப் பார்க்கிறது” – சாட்டை துரைமுருகன் பரபரப்பு குற்றச்சாட்டு | Sattai duraimurugan pressmeet after the release

1277932.jpg
Spread the love

திருச்சி: “நான் தலைமுறைவாகியிருந்ததாக சொல்லி என்னை குற்றாலத்தில் வைத்து கைது செய்து என்னுடைய காரிலேயே அழைத்து வந்தனர். ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வரும்போது வேண்டுமென்றே வாகனத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றனர். என்னை திட்டமிட்டு இந்த அரசு கொலை செய்யப் பார்க்கிறது” என்று நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: “திமுக அரசு என் மீது பல்வேறு வழக்குகளைப் போட்டு என்னை முடக்க நினைத்தது. நீதிமன்றத்தில் எங்களுடைய வாதங்களை முன்வைத்தோம். இது அப்பட்டமான பொய் வழக்கு. நான் வெளியிட்ட காணொலிகளில் 800க்கும் மேற்பட்ட காணொலிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசியவைதான். குறிப்பாக வேங்கைவயல், மேல்பாதி, நாங்குநேரி உள்ளிட்ட சாதிய பிரச்சினைகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நின்றிருக்கிறேன்.

ஆனால் என்னை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து இந்த அரசு முடக்க முயல்கிறது. நான் பாடிய அந்த குறிப்பிட்ட பாடல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவின் தேர்தல் பிரச்சாரங்களில் பாடப்படும் ஒரு பாடல். நான் அப்பாடலை மேற்கோள் காட்டித்தான் பேசினேன். நான் எந்த சமூகத்தையும் இழிவுப்படுத்தவில்லை. அந்த குறிப்பிட்ட வார்த்தை சாதியச் சொல் என்பதே சத்தியமாக எனக்கு தெரியாது. அதனை இன்றுதான் நான் புரிந்துகொண்டேன். நீதிபதி நேர்மையாக விசாரித்து, இந்த வழக்கு செல்லாது என்று என்னை விடுதலை செய்திருக்கிறார்.

யாருமே பேசக்கூடாது என்று நினைப்பது அப்பட்டமான அடக்குமுறை. பாஜகவை பார்த்து பாசிச கட்சி என்று சொல்லும் நீங்கள், இன்று எனக்கு செய்திருப்பதற்கு பெயர் என்ன? நான் குற்றாலத்தில் இருந்த நிலையில், நான் தலைமுறைவாகியிருந்ததாக சொல்லி என்னை அங்கு வைத்து கைது செய்து என்னுடைய காரிலேயே அழைத்து வந்தனர். அந்த ஓட்டுநர் முழு போதையில் காரை ஓட்டிக் கொண்டு வந்தார். ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வரும்போது வேண்டுமென்றே என் வாகனத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றனர்.

என்னை திட்டமிட்டு இந்த அரசு கொலை செய்யப் பார்க்கிறது. மதுரை அருகே விளாங்குளம் சுங்கச்சாவடி பக்கத்தில் பின்னால் நின்று கொண்டிருந்த லாரி என் கார் மீது மோதி என் முதுகில் அடிப்பட்டது. என்னுடைய ஓட்டுநருக்கு தலையில் அடிப்பட்டுள்ளது. அந்த அரசிடம் என்னுடைய உயிருக்கு பாதுகாப்பு இல்லை. நீதிமன்றம் எனக்கு பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு சாட்டை துரைமுருகன் தெரிவித்தார்.

முன்னாள் முதலவர் கருணாநிதி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பாடல் ஒன்றை பாடியதாக திமுக ஐடி விங் சார்பில் புகார் அளிக்கப்பட்டதன்படி, திருச்சி சைபர் கிரைம் போலீஸார் 5 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் இன்று காலை தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வைத்து தனிப்படை போலீஸார் துரைமுருகனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகனிடம் 3 மணி நேரத்துக்கு மேல் விசாரணை போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் துரைமுருகன் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாட்டை துரைமுருகனை கைது செய்ய எந்தவித முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்ததோடு, அவரை நீதிமன்றக் காவலில் வைக்க அவசியமில்லை என்று கூறி விடுவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *