“என்னை சோதிக்காதீர்கள்..!” – கோபி பொதுக் கூட்டத்தில் செங்கோட்டையன் ஆவேசம் | former aiadmk minister Sengottaiyan sparks in party public meeting

1350605.jpg
Spread the love

ஈரோடு: “அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான். இதை மறந்து என்னை சோதிக்காதீர்கள். நான் தெளிவாக, தெளிந்த சிந்தனையோடு இருக்கிறேன். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையோடு இருக்கிறேன்” என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது: “நமது எதிர்கட்சித் தலைவர் (பழனிசாமி) கட்டளையின் அடிப்படையில், ஈரோடு கிழக்கு தேர்தல் காரணமாக, இந்தக் கூட்டம் தாமதமாக நடக்கிறது.

நான் எத்தனை ஆண்டு காலம் அரசியலில் இருக்கிறேன். எத்தனை தலைவர்களை சந்தித்துள்ளேன் என்பது உங்களுக்குத் தெரியும். இங்கு எதாவது கிடைக்குமா என்று பார்த்தால், எதுவும் கிடைக்காது.

இந்தக் கூட்டத்தில் நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. நான் எம்ஜிஆர், ஜெயலலிதா பாதையில் செல்கிறவன். அந்த தெய்வங்கள் தான் நமக்கு வழிகாட்டிகள். அவர்கள் இருவரும் இல்லை என்றால் நான் இந்த இடத்தில் நின்று பேசியிருக்க இயலாது.

பொதுக்குழு நடத்தியவன்: அதிமுக தொடங்கப்பட்டபோது நான் சாதாரண தொண்டன். அப்போது எனக்கு பொருளாளர் பதவியை எம்ஜிஆர் வழங்கி, பொதுக்குழுவை நடத்துமாறு கூறினார். நாங்கள் சிறப்பாக பொதுக்குழுவை வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம். அவர் உத்தரவின் பேரில் நாங்கள் பச்சை குத்திக் கொண்டோம். எம்ஜிஆரோடு 14 முறை நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டவன். தமிழகம் முழுவதும் கிராமம் வாரியாக உள்ள அத்தனை நிர்வாகிகள் பெயரும் எனக்குத் தெரியும்.

அத்திக்கடவு – அவிநாசி திட்ட விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை என்பதால் நான் கலந்து கொள்ளவில்லை. இதன்பிறகு எத்தனையோ சொல்கிறார்கள். என் வீட்டுக்கு நான் கேட்காமலே போலீஸ் பாதுகாப்பு போட்டார்கள். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. என்னைப் பொறுத்தவரை நேர்மையான பாதையில், தன்னலம் கருதாது பாடுபடக் கூடியவன். ஏற்கெனவே எனக்கு வாய்ப்பு வந்தபோது, அதுகுறித்து நான் கவலைப்படவில்லை. இந்த இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான். இதை மறந்து என்னை சோதிக்காதீர்கள். இதை வேண்டுகோளாக வைக்கிறேன்.

தலைவராக நினைக்கவில்லை: நான் தெளிவாக, தெளிந்த சிந்தனையோடு இருக்கிறேன். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையோடு இருக்கிறேன். இந்த இயக்கம் தொண்டர்கள் நிறைந்த, ஒற்றுமையோடு பணியாற்றுகின்ற, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்டதாகும். இதை மறந்து விடக்கூடாது.

ஜெயலலிதா விரலைக் காட்டினால் அதற்கான காரணத்தை உணர்ந்து செயல்படுபவன் நான். எதைக் கொடுத்தாலும் வெற்றிகரமாக முடிக்கக் கூடியவர், விசுவாசமானவர் செங்கோட்டையன் என்று ஜெயலலிதா என்னை பாராட்டியுள்ளார். தொண்டனோடு தொண்டனாக இருந்து பணியாற்றக் கூடியவன். என்றைக்கும் தலைவராக நினைக்கவில்லை.

திமுக ஆட்சியில் பல்வேறு சோதனைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். எனவே தொண்டர்களோடு தொண்டராக இருந்து நான் பணியாற்றி மீண்டும் தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை உருவாக்குவோம்” என்று அவர் பேசினார். இந்தக் கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ. பண்ணாரி, முன்னாள் எம்.பி. சத்தியபாமா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேனர் சொல்லும் சேதி: கோபியில் நடந்த எம்ஜிஆர் பிறந்ததின விழா பொதுக் கூட்ட மேடையில் வைக்கப்பட்டு இருந்த பேனரில், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் முழு உருவப்படங்கள் இரு புறமும் இடம்பெற்று இருந்தன. அண்ணாவின் சிறிய படத்திற்கு கீழே, பேனரின் மையப்பகுதியில், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் செங்கோட்டையனின் படங்கள் ஒரே அளவில் இடம்பெற்று இருந்தன.

அத்திக்கடவு – அவிநாசி திட்ட பாராட்டு விழா அழைப்பிதழில் செங்கோட்டையன் படம் இடம்பெற்று இருந்தாலும், எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததால், இந்த விழாவில் செங்கோட்டையன் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *