என்ன தவறு செய்​தேன்? கடந்த ஒரு மாதமாக தூக்கம் வரவில்லை: மன உளைச்சலுடன் இருந்ததாக அன்புமணி வேதனை | anbumani ramadoss speech

1362863
Spread the love

அரூர்: 2026 தேர்தலில் நாம் ஆட்சிக்கு வர, பாமக கூட்டணி ஆட்சிக்கு வர சிந்தித்து செயல்படவேண்டும், என தருமபுரி மாவட்டம் கடத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

தருமபுரி மாவட்டம் கடத்தூரில், வன்னியர் சங்கம் மற்றும் பாமகவின் மூத்த முன்னோடி மறைந்த கனல் ராமலிங்கத்தின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று படத்தினை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழகம் முன்னேற வேண்டுமானால், வன்னியர் சமூகம் முன்னேறவேண்டும். அதற்கு தான் பாமக கட்சி தோற்றுவிக்கப்பட்டது. அதற்காக டாக்டர் ராமதாஸ் உடன் பாடுபட்டவர் மறைந்த கனல் ராமலிங்கம். வெற்றிகரமாக நடந்து முடிந்த வன்னியர் சங்க மாநாடு பலருக்கும் பொறாமையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் வயிற்றெரிச்சலில் குற்றம் சாட்டி பேசுகின்றனர். எவ்வளவோ தடைகளை மீறி மாநாடு நடத்தப்பட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு 1,150 நாள் ஆகிறது. ஆனால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டம், தீர்ப்பு எல்லாம் சாதகமாக இருந்தும் இதனைக் கொடுப்பதற்கு ஆளுபவர்களுக்கு மனசு இல்லை. 2 மாதத்திலேயே சர்வே எடுக்கமுடியும். பதவி, பொறுப்பு மீது எனக்கு ஆசை இல்லை. ராமதாஸின் லட்சியம், கொள்கையை நிறைவேற்ற கட்சியில் உள்ளவர்கள் பாடுபடவேண்டும்.

2026 தேர்தலில் நாம் ஆட்சிக்கு வர, நமது கூட்டணி ஆட்சிக்கு வர சிந்தித்து செயல்படவேண்டும். கடந்த ஒரு மாதமாக மனஉளைச்சலில் இருந்தேன். நான் என்ன தப்பு செய்தேன், ஏன் தூக்கம் வரவில்லை, இதே நினைவுதான். ராமதாஸ் சொல்வதை செய்து முடித்தவன் இனியும் அவர் சொல்வதை செய்து முடிப்பேன். அது எனது கடமை. நமது சமுதாயம் முன்னேறினால் தான் தமிழகம் முன்னேறும். எங்களுக்கு நியாயம் வேண்டும், சமூக நீதிவேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் மட்டுமே இடஒதுக்கீடு கிடைக்கும். அதற்கு இனி வரும் காலத்தில் ஒற்றுமையாக சேர்ந்து வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ, சதாசிவம் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி, மாவட்ட பாமக செயலாளர் அரசாங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *