என்றும் எங்கள் வாத்தியார் எம்ஜிஆர் : நினைவுநாளில் எடப்பாடி புகழாரம்  – Kumudam

Spread the love

எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 38-வது நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் கருப்பு நிற உடை அணிந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர். அவரைத்தொடர்ந்து மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் மரியாதை செலுத்தினார்.இதையடுத்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நினைவிடத்தில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி எடுத்தனர்.

என்றும் எங்கள் வாத்தியார் எம்ஜிஆர்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- தமிழக அரசியல் வரலாற்றின் பொற்கால அத்தியாயம்… வறியவர்களின் வேதனையைத் தன் வேதனையாகக் கொண்டு, அன்பையும் , அருளையும் அரசியலாக்கிய மக்கள் திலகம், நம் இயக்கத்தை மட்டுமல்ல,

ஒரு தலைமுறையின் கனவுகளையும் உருவாக்கிச் சென்ற நமது வாழ்நாள் வழிகாட்டி, தமிழ்நாட்டின் சமூகநீதி, கல்வி, மருத்துவம், வர்த்தகம் என எந்தத் துறையை எடுத்தாலும், அவற்றின் வரலாற்றைச் செதுக்கிய சிற்பியாகத் திகழ்ந்த ஒப்பாரும் மிக்காருமற்ற முதல்-அமைச்சர், திராவிட இயக்கத்தின் திரைமுகமாய், எளிய மக்களிடம் இயக்கக் கொள்கைகளைக் கொண்டு சேர்த்தப் பேராளுமை, பேரறிஞர் அண்ணாவின் வழிமறந்து தமிழகத்தை ஒரு குடும்பம் தன் கொள்ளைக் காடாக மாற்றத் துடித்த போது, அதிமிக எனும் மக்களாட்சி விழுமியங்களைக் காத்து நிற்கும் அண்ணா வழிப் பேரியக்கத்தைக் கண்ட நம் கழகத்தின் நிறுவனத் தலைவர், அன்றும், இன்றும், என்றும் எங்கள் வாத்தியார் எம்.ஜி.ஆர்.

பாரத ரத்னா” இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் நினைவு நாளான இன்று, நம் உயிர்நிகர் தலைவரை வணங்குகிறேன். புரட்சித்தலைவரின் பெரும் புகழையும், சரித்திர சாதனைகளையும் ஏந்தி நிற்கும் நம் உயிருக்கு ஒப்பான நம் கழகம்,

புரட்சித்தலைவர் இந்த இயக்கத்தைக் கண்டெடுத்த நோக்கத்தை, தலைவர் எப்படி நிறைவேற்றிக் காட்டினாரோ, அதேபோல் மீண்டும் நிறைவேற்றி, மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்க வேண்டிய கடமை இன்றைக்கு நமக்கு இருப்பதை உணர்ந்து, தீயசக்தி திமுக-வின் மக்கள் விரோத விடியா ஆட்சிக்கு தமிழக மக்கள் துணையோடு முடிவுரை எழுதிட உறுதியேற்போம்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்

தந்தை பெரியாரின் 52-வது நினைவுநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,ஆதிக்கத்தின் அனைத்து வடிவங்களையும் சுட்டெரித்த பேரொளி,தமிழ்நாட்டின் பகுத்தறிவுப் பாதைக்கு வித்திட்ட சுடரொளி,

திராவிட இயக்கத்தின் அறிவொளி தந்தைப் பெரியார் அவர்களின் நினைவு நாளான இன்று,மனிதம் போற்றும் உன்னதக் கோட்பாடாம் திராவிடத்தின் உயரிய விழுமியங்களோடு, சமூகநீதிப் பாதையில் தொடர்ந்து பயணிக்க உறுதியேற்போம்! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பன்னீர்செல்வத்தை சேர்ப்பது எடப்பாடி கையில் : ஜெயக்குமார் 

மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் 38-வது நினைவு தினத்தையொட்டி சென்னை கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பன்னீர்செல்வத்தை சேர்ப்பது தொடர்பாக எடப்பாடி தான் முடிவு செய்வார்.என தெரிவித்தார். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *