வேடசந்தூர்: என்றும் ‘கை’ நம்மோடு தான் இருக்கும், நம்மைவிட்டு கை என்றும் போகாது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது: “இந்த விழா மேடைக்கு நான் முழுமையாக வருவேனா என்றே சந்தேகம் இருந்தது. உங்களின் அன்பை பார்த்து. எனது கையோடு முழுதாக வருவேனா என்ற சந்தேகம் இருந்தது. அந்த அளவுக்கு தொண்டர்கள் உற்சாக மிகுதியில் எனக்கு கை கொடுத்து வரவேற்றனர்.
என்றும் ‘கை’ நம்மைவிட்டு போகாது. என்றும் நம்முடன் தான் இருக்கும். நான் எனது கையை சொன்னேன். நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சொன்னேன். இங்கு மக்கள் மிகவும் மகிழ்ச்சியோடும் எழுச்சியோடும் உற்சாகத்துடன் வந்து இருக்கிறீர்கள். வாக்காளர் பட்டியலில் பெண்களின் எண்ணிக்கையை அதிகமாக இருக்கும். அதேபோல் இந்த விழாவிலும் பெண்கள் அதிக அளவில் பங்கேற்றி இருக்கிறீர்கள்.
நமது திமுக அரசு, பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, பெண்களின் அரசாக செயல்படுகிறது. அதுவே பெண்கள் மகிழ்ச்சியாகவும் அதிகளவிலும் வந்திருப்பதற்கும் காரணமாகும். மகளிர் உரிமைத் திட்டத்தில் ஒரு கோடியே 20 லட்சம் பேருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்க ப்பட்டு வருகிறது. தொடர்ந்து 25-வது மாதமாக உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்தும் உதவித்தொகை தரவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். அவர்களுக்கும் இன்னும் இரண்டு மாதத்தில் வழங்கப்படும். இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதிக பொருளாதார வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதைப் பார்த்து தான் சங்கிகளுக்கும், பாசிஸ்ட்களுக்கும் வயிற்று எரிச்சல். எப்படியாவது தமிழகத்திற்கு தொல்லை கொடுக்க வேண்டும். தமிழகத்தை அபகரிக்க வேண்டும் என திட்டம் தீட்டி வருகின்றனர்.
இதை பொறுக்க முடியாமல் பாசிசவாதிகள் சங்கிகள் வயிற்று எரிச்சல் கொள்கிறார்கள். தமிழ்நாட்டை அபகரிக்க திட்டம் போடுகிறார்கள். மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி என்ற அடிமை சிக்கியுள்ளார். இந்த அடி பத்தவில்லை என புது அடிமைகளை தேடி வருகின்றனர். எத்தனை அடிமைகள் ஒன்றாக சேர்ந்து வந்தாலும் தமிழகத்தை அபகரிக்க திட்டம் போட்டாலும், பாசிச பாஜக தமிழகத்தில் காலடி எடுத்தவைக்க முடியாது. ஒவ்வொரு திமுக தொண்டனும் அதை ஓட ஓட விரட்டுவான்.
எடப்பாடி பழனிச்சாமி ஒரு பஸ்சை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார். அவருக்கு ஜெயலலிதா முகம் மட்டுமின்றி, எம்ஜிஆரின் முகமும் மறந்து விட்டது. நீலகிரியில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அண்ணா என்று கூறுகிறார். கீழே இருந்து தொண்டர் நினைவு படுத்துகிறார். அந்த அளவுக்கு யாரைப் பார்த்தாலும் பழனிசாமிக்கு அமித்ஷாவின் முகமாகத்தான் தெரிகிறது.
நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக அணி வெற்றி பெற வேண்டும் என்று முதல்வர் இலக்கு நிர்ணயித்திருக்கிறார். அந்த இலக்கை அடைய வேண்டும். அதில் முதல் தொகுதியாக வேடசந்தூர் இருக்கும். திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அந்த வெற்றி தொடங்க வேண்டும்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏ.,க்கள் காந்தி ராஜன், செந்தில்குமார், கரூர் எம்.பி., காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.