”என் தங்கமே, என்னை விட்டுட்டுப் போய்ட்டியே” – ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் மரணம்; ராணிப்பேட்டை துயரம் | tragic incident near ranipet – three boys drown in lake while bathing unable to swim

Spread the love

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் அருகேயுள்ள திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவரின் 13 வயது மகன் பார்த்திபன், பெல் ராமகிருஷ்ணா பள்ளியில் ஏழாம் வகுப்புப் படித்து வந்தான்.

திரு.வி.க நகர் ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவரின் 14 வயது மகன் நித்திஷ், சிப்காட் கிறிஸ்ட் தி கிங் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்தான். அதேபோல, திரு.வி.க நகர் நான்காவது பொதுத் தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன். இவரின் மகன் பெயரும் நித்திஷ் (வயது 13). இந்த நித்திஷ் சிப்காட் சி.எஸ்.ஐ பள்ளியில் ஆறாம் வகுப்புப் படித்துவந்தான்.

இந்த நிலையில், மூன்று சிறுவர்களும் இன்றைய தினம் மணியம்பட்டு ஏரியில் குளிப்பதற்காகச் சென்றிருக்கின்றனர். நீச்சல் தெரியாததால், மூன்றுபேரும் ஆழமான பகுதியில் சிக்கி மூழ்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்த சிறுவர்கள்

உயிரிழந்த சிறுவர்கள்

தகவலறிந்ததும், அப்பகுதி மக்களும், சிப்காட் போலீஸாரும் விரைந்து சென்று சிறுவர்களின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சிறுவர்களின் உடலைப் பார்த்து பெற்றோர்களும், உறவினர்களும், `என் தங்கமே என்னை விட்டுட்டுப் போய்ட்டியே..’ என்று கதறி அழுதது, நெஞ்சை உலுக்கியது.

இந்தச் சம்பவத்தால், ராணிப்பேட்டை மாவட்டமே துயரில் மூழ்கியிருக்கிறது.

பெற்றோர்கள் கவனத்துக்கு…

குழந்தைகளையும், சிறுவர்களையும், நீச்சல் தெரியாத நபர்களையும் நீர்நிலைகள் பக்கம் அனுப்ப வேண்டாம். இப்போது, பொதுத்தேர்வு முடிந்து கோடை விடுமுறையும் தொடங்கியதால், பிள்ளைகள் பலரும் விளையாடச் செல்லும் இடங்களில் நீர்நிலைகளில் குளிக்க இறங்குகிறார்கள். எனவே, பிள்ளைகள் எங்குச் செல்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பதை பெற்றோர்கள் மிக கவனமாகக் கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற துயர்மிகு சம்பவங்கள் இனியும் நடைபெறாதவாறு எச்சரிக்கையுடன் இருப்போம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *