கள்ளக்குறிச்சி மாவட்டம், வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜாவுக்கும், பெங்களூருவைச் சேர்ந்த நந்தினிக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இரண்டு குழந்தைகளுடன் இருவரும் வளையாம்பட்டு கிராமத்தில் வசித்து வந்த நிலையில், கடந்த 2018-ல் ராஜா தற்கொலை செய்து கொண்டார்.
அதையடுத்து வளையம்பட்டு கிராமத்திலேயே இருந்தார் நந்தினி. அப்போது விரியூரில் இருந்த பிசியோதெரப்பி கிளினிக்குக்கு ஒருமுறை சென்றிருக்கிறார் நந்தினி.
அப்போது அவருக்கும், பிசியோதெரப்பி கிளினிக் நடத்தி வந்த மரிய ரொசாரியோ என்பவருக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. அந்த நட்பு காதலாக மாறிய நிலையில், 2020-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதேசமயம் இவர்களின் திருமணம், மரிய ரொசாரியோவின் தாய் கிறிஸ்தோஃப் மேரிக்குப் பிடிக்கவில்லை. அதனால் மருமகளுடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.
மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையேயான சண்டை அன்றாட நிகழ்வாக மாறியதால், வடசேமபாளையம் கிராமத்தில் மனைவியுடன் தனிக்குடித்தனம் சென்றார் மரிய ரொசாரியோ. ஆனாலும் அங்கும் சென்று அவ்வப்போது மருமகளிடம் தகராறு செய்து வந்திருக்கிறார் கிறிஸ்தோஃப் மேரி.
இந்த நிலையில்தான், `டிசம்பர் 29-ம் தேதி என் மனைவி நந்தினியை என் அம்மா கோயிலுக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அன்று என் அம்மா மட்டும்தான் திரும்பி வந்தார்.
என் மனைவி எங்கே என்று அம்மாவிடம் கேட்டபோது, இனிமே அவ வரமாட்டான்னு சொன்னாங்க. என் மனைவியை கண்டுபிடித்துக் கொடுங்கள். எங்கள் 5 வயது மகன் அம்மாவை கேட்டு அழுது கொண்டேயிருக்கிறான்.
என் அம்மா மீது எனக்கு சந்தேகமாக இருக்கிறது” என்று சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார் மரிய ரொசாரியோ. அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், மரிய ரொசாரியோவின் தாய் கிறிஸ்தோஃப் மேரியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தன்னுடைய மருமகளை கழுத்தை அறுத்துக் கொலை செய்து உடலை தனியாகவும், தலையை தனியாகவும் புதைத்து விட்டதாக தெரிவித்திருக்கிறார் கிறிஸ்தோஃப் மேரி.