மும்பையில் நேற்று டாடா மராத்தான் போட்டி நடந்தது. இதையடுத்து தென்மும்பையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இப்போட்டியில் பங்கேற்க வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தடகள வீரர்கள், வீராங்கனைகள் வந்திருந்தனர்.
பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர். பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தனது முன்னாள் மனைவி கிரண் ராவ், மகள் இராகான், மருமகன் நுபூர், மகன் ஜுனைத் கான், ஆஷாத் ஆகியோருடன் சேர்ந்து இந்த மராத்தான் போட்டியில் பங்கேற்றார்.
ஆமீர் கான், இரா கான், கிரண் ராவ், ஆஷாத் ஆகியோர் 5.9 கிலோமீட்டர் பிரிவில் ஓடினர். ஜுனைத் கான் 10 கிலோமீட்டர் பிரிவில் பங்கேற்றார். மருமகன் நுபூர் முழு மராத்தானில் பங்கேற்றார்.

இதில் பேசிய ஆமீர் கான், “‘மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் மராத்தானில் கலந்து கொண்டதைப் பார்க்கும்போது ஏற்பட்ட உற்சாகம் ஒவ்வொரு வருடமும் என்னை இங்கு வரவழைக்கிறது. மும்பை மக்களிடம் ஒரு வித வேகம் இருக்கிறது”என்றார்.
‘ஏன் மராத்தான் போட்டியில் பங்கேற்றீர்கள்’ என்று கேட்டதற்கு, ”எனக்கு மராத்தான் போட்டியில் பங்கேற்பது குறித்து ஐடியா இல்லை. எனது மகள்தான் என்னைக் கட்டாயப்படுத்தினார். எனவேதான் இதில் நான் பங்கேற்றேன்” என்றார்.