பாரீஸ் ஒலிம்பிக்கில் தனது பாலினம் தொடர்பாக தவறான எண்ணங்கள் மற்றும் வெறுப்புணர்வை பலரும் வெளிப்படுத்துவது தனது கண்ணியத்தை பாதிப்பதாகவும், இதுபோன்ற தவறான எண்ணங்கள் மற்றும் விமர்சனங்களால் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமென் கெலிஃப் தெரிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துகொண்ட இமென் கெலிஃப் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஒலிம்பிக்கின் தத்துவங்களையும், அதன் விதிகளையும் அனைவரும் மதிக்க வேண்டும் என்ற செய்தியை உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் கூறிக் கொள்கிறேன். ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் மீது வெறுப்பு பிரசாரம் மற்றும் தவறான எண்ணங்கள் மூலம் அவர்களது மனதினை காயப்படுத்தாதீர்கள். ஏனென்றால், உங்களுடைய இதுபோன்ற செயல்கள் பாதிக்கப்படுபவரின் வாழ்க்கையில் மனதளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற தவறான எண்ணங்கள் மக்களை அழித்துவிடும். மக்களின் எண்ணங்களை அழித்துவிடும். மக்களை பிளவுப்படுத்திவிடும். அதன் காரணமாகவே வீரர், வீராங்கனைகளை கேலி, கிண்டல்களுக்கு ஆளாக்குவதிலிருந்து விலகி இருங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். வாரத்தில் இரு முறை நான் எனது குடும்பத்தினருடன் பேசி அவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். பாரீஸ் ஒலிம்பிக்கில் நடந்த விஷயங்கள் மற்றும் என் மீதான விமர்சனங்கள் அவர்களை ஆழமாக பாதித்திருக்காது என நம்புகிறேன். அவர்கள் என்னைப் பற்றி கவலைப்படுகிறார்கள்.
கடவுள் மனது வைத்தால், எனது இந்தப் போராட்டம் தங்கப் பதக்கத்தில் சென்று முடியும். தங்கப் பதக்கம் வென்றால், அது என்மீதான விமர்சனங்கள் மற்றும் தவறான எண்ணங்களுக்கு நான் கொடுக்கும் சரியான பதிலாகவும் இருக்கும். ஒலிம்பிக் குழு எனக்கு நீதி வழங்கியுள்ளது எனத் தெரியும். ஒலிம்பிக் குழு என்னுடைய விஷயத்தில் நடந்துகொண்ட விதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. அவர்கள் உண்மையின் பக்கம் இருக்கிறார்கள் என்றார்.