தருமபுரி: “மதிமுகவை கருவியாக பயன்படுத்தி, என் மூச்சிருக்கும் வரை தமிழகத்துக்காக பாடுபட்டுக்கொண்டே இருப்பேன்” என்று தருமபுரியில் நடந்த மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் வைகோ உருக்கமாக பேசினார்.
தருமபுரியில் மதிமுகவின் வேலூர் மண்டல செயல் வீரர்கள் கூட்டம் இன்று (ஜூலை 17) பென்னாகரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்று பேசியது: “சென்னை மாநிலக் கல்லூரியில் பயிலும் காலத்தில் கல்லூரி விழாவில் மேடையில் நான் பேசியதை பார்த்த காமராஜர், என்னை காங்கிரஸ் கட்சிக்கு வருமாறு அழைத்தார். நான் மறுத்துவிட்டேன்.
திமுகவில் இருந்த காலத்தில் போராட்டங்களில் பங்கேற்று முதலில் கைதாவதும் நான் தான்; இறுதியாக விடுதலையாவதும் நான் தான். மாநிலங்களவையில் 1,555 முறை நான் பேசியிருக்கிறேன். அதை ஒரு தொகுப்பாக வெளியிட இருக்கிறேன். என் வாழ்வு போராட்டங்கள் நிறைந்தது. பல முறை துரோகங்களையும், ஏமாற்றங்களையும் தாங்கியவன். துரோகம் எனக்கு புதிதல்ல. 1994-ம் ஆண்டு மதிமுகவைத் தொடங்கினேன்.
கட்சி தொடங்கியதும் அன்றைய தருமபுரி மாவட்டத்தில் இருந்த கிருஷ்ணகிரியில் தான் என் தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கினேன். 61 ஆண்டுகள் அரசியல் களத்தில் தமிழகத்துக்கானதாவும், தமிழக மக்களுக்கானதாகவும் என் வாழ்வு இருந்துள்ளது. நான் பட்டியல் சமூகத்தினருக்கு எதிரானவன் என்று தற்போது பேசுகிறார்கள். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த என் நண்பர்கள் என் வீட்டின் சமையலறை வரை வருவார்கள். வைகோவை பழிக்கும் ஊடக சகோதரர்களே, உங்களுக்கு துளியும் மனசாட்சி இல்லையா?
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நீதிமன்றத்தில் வாதாடி வென்றேன். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை எதிர்த்து போராடி வெற்றி பெற்றேன். காவிரி விவகாரம், நியூட்ரினோ மையம் ஆகிய பிரச்சினைகளுக்காக போராடி இருக்கிறேன். என் மூச்சிருக் கும் வரை மதிமுகவை கருவியாக பயன்படுத்தி தமிழகத்துக்காக பாடுபடுவேன்.
மோடியை ஆதரித்தேன். ஆனால், தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக் சேவை பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு அழைத்திருந்தனர். அதை எதிர்த்து டெல்லியில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தி கைதானேன்.
மேலும், பாஜக கூட்டணியில் இருந்தும் வெளியேறினேன். இந்துத்துவா சக்திகளை தமிழகத்துக்குள் நுழைய விடாமல் தடுக்க திமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளேன். முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் நல்லாட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். வரவிருக்கும் தமிழக சட்டப் பேரவை தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்” என்று வைகோ பேசினார்.
இந்தக் கூட்டத்தில், மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன்ராஜ், பொருளாளர் செந்திலபதின், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் வந்தியதேவன், மாநில தீர்மானக் குழு செயலாளர் மணிவேந்தன், மாநில மாணவரணி செயலாளர் சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.