“என் வாழ்வில் திருப்புமுனையை தந்தது மதுரை” – மாமதுரை விழாவில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் | “The city has been the biggest turning point in my life” – Chief Minister Stalin’s pride at the Mamadurai function

1292178.jpg
Spread the love

மதுரை: ‘‘என்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திமுக இளைஞரணி தொடங்கப்பட்டதும் இந்த மதுரை மண்ணில் இருந்துதான்” என்று மாமதுரை தொடக்க விழா நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மதுரை நகரின் மரபையும், பண்பாட்டையும் கொண்டாடும் வகையில் மாமதுரை விழா இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மாமதுரை விழாவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநகராட்சி மேயர் இந்திராணி, எம்.பி., சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் தளபதி, பூமிநாதன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “திங்களைப் போற்றுதும், ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும் என்று சிலப்பதிகாரம் தீட்டிய இளங்கோவடிகள் எழுதினார். இப்போது, மா மதுரை போற்றுவோம், மா மதுரை போற்றுவோம் என்று வேள்பாரி தீட்டிய எழுத்தாளர் சு.வெங்கடேசன் எம்.பி இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார். எல்லோருக்கும் அவரவரது ஊர் பெருமைக்குரியதுதான்; போற்றுதலுக்குரியதுதான். அதிலும் குறிப்பாக, மதுரை மாநகர் என்பது பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்டது என்று அதிகம் விளக்கத் தேவையில்லை.

இந்தியாவின் பழமையான நகரங்களில் ஒன்று மதுரை. இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்டது மதுரை. பாண்டிய மன்னர்கள் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த நகரம். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியப் பாண்டியன் ஆட்சி செய்த நகரம். ‘தவறு செய்தவன் மன்னனே ஆனாலும்’ என மன்னனையே கண்ணகி கேள்வி கேட்ட மண் இது. நீதியைக் காக்க தன்னுடைய உயிரையே தந்த மன்னர் ஆட்சி செய்த இடம் இது.

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

திருமலை நாயக்கரும், ராணி மங்கம்மாளும் ஆண்ட பூமி இது. புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கும் கோயில் நகரம் இது. அனைத்துக் கலைகளும் ஒருங்கே இருக்கும் பண்பாட்டுச் சின்னமாக இந்தக் கோயில் கருதப்படுகிறது. புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா, மாபெரும் பண்பாட்டு விழாவாக இங்கு நடைபெற்று வருகிறது. 1866-ம் ஆண்டே நகராட்சியாக ஆன ஊர் இது.

சென்னைக்கு அடுத்ததாக இரண்டாவதாக 1971-ம் ஆண்டு மதுரையைத்தான் மாநகராட்சி ஆக்கினார் அன்றைய முதல்வர் கருணாநிதி. காந்தி தன்னை அரையாடை மனிதராக மாற்றிக்கொண்ட இடமும் இந்த மதுரை தான். ஏன், என்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திமுக இளைஞரணி தொடங்கப்பட்டதும் இந்த மதுரை மண்ணில் இருந்துதான். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இத்தகைய மதுரையை மதுரைக்காரர்கள் மட்டுமல்ல… எல்லோரும் போற்றலாம். மதுரையைப் போற்றுவோம் என்று கொண்டாடலாம்.

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

திமுகவின் திராவிட மாடல் அரசில் மதுரை மாவட்டத்துக்கு இரண்டு அமைச்சர்களை வழங்கியிருக்கிறோம். தங்களின் சிறப்பான செயல்பாடுகளால் இரண்டு பேரும் மதுரைக்கும், நம்முடைய அரசுக்கும் பெருமை சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்று அவர் பேசினார். மதுரை ‘யங் இந்தியன்ஸ்’ அமைப்பின் தலைவர் பைசல் அகமது, மாமதுரை விழா தலைவர் விக்ராந்த் கார்மேகம் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநகராட்சியுடன் இணைந்து செய்திருந்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *