எம்ஜிஆரின் நிலைப்பாடும் இருமொழி கொள்கைதான்: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தகவல் | VIT Chancellor says MGR stand was bilingual policy

1352363.jpg
Spread the love

வேலூர்: ‘மொழிக்கொள்கை விஷயத்தில் இருமொழிக் கொள்கைதான் எம்ஜிஆரின் நிலைப்பாடு’ என விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார். வேலூர் விஐடி பல்கலைக் கழகம் சார்பில் ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு சொற்பொழிவு’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர்கள் வி.வி.சுவாமிநாதன், சி.பொன்னையன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

முன்னதாக வேந்தர் கோ.விசுவ நாதன் பேசியதாவது: நான் திமுகவில் இருந்து தாமதமாகத்தான் அதிமுகவுக்கு வந்தேன். அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கியபோது அண்ணாயிசம் கொள்கையை தெரிவித்தார். அதில் முக்கியமான ஒன்று மொழிக்கொள்கை. ஒரு மொழியின் முன்னேற்றம் மற்றமொழிக்கு அழிவை ஏற்படுத்திவிடக் கூடாது. மொழியின் முன்னேற்றம் மக்கள் விருப்பமாக இருக்கவேண் டுமே தவிர சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தி உருவாக்க முடியாது.

கடந்த 1963-ல் இந்திய மொழிக் கொள்கை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தி மட்டும் ஆட்சி மொழியாக இருக்கும் என்பதை மாற்றி ஆங்கிலமும் தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்கும் என்று எழுதப்பட்டது. அதே சட்டத்தில் கடந்த 1976-ல் விதிகள் கொண்டு வரப்பட்டபோது அங்கீகரிக்கப்பட்ட மொழிகளுக்கான விதிகளில் தமிழ்நாட்டை தவிர மற்றவர்களுக்கு பொருந்தும் என சொல்லப்பட்டது.

கடந்த 1968-ல் நான் மக்களவையில் இருந்தபோது மொழிக்கொள்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், இந்தி பேசாத மாநிலங்களில் மாநில மொழி, ஆங்கிலத்துடன் ஒரு நவீன இந்திய மொழியும் குறிப்பாக தென்னிந்திய மொழி படிக்கலாம் என கூறப்பட்டது. அங்கெல்லாம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் படிப்பதாக எனக்கு தெரியவில்லை.

இதை இப்போது நினைவுபடுத்த விரும்புகிறேன். மொழிக் கொள்கையைப் பொருத்தவரை இருமொழிக் கொள்கை என்பதுதான் எம்ஜிஆரின் நிலைப்பாடு. உயர்கல்வி பின்தங்கிய நாடுகளில் இந்தியா உள்ளது. ஆனால், நமது மாநிலம் முன்னேறி இருப்பதற்கு காரணம் 2 பேர்தான்.

பள்ளிக்கல்வியில் காமராஜர், உயர் கல்வியில் எம்ஜிஆர்தான் பெரிய மாற்றத்தைச் செய்தனர். தமிழக அரசு பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதைப் பெரிதுபடுத்தி, நம் மாநிலத்தில் முன்மாதிரியாக அனைவருக்கும் உயர்கல்வியை இலவசமாக வழங்க வேண்டும்.

முதலில் பெண்களுக்கு கொடுத்து, பிறகு மாணவர்களுக்கு கொடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில், விஐடி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், முன்னாள் அமைச் சர்கள் கே.சி.வீரமணி, அக்ரி எஸ் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பாண்டுரங்கன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *