எம்ஜிஆர், ஜெயலலிதா சாதி எல்லைகளைக் கடந்தவர்கள்: திருமாவளவன் திடீர் புகழாரம் | MGR and Jayalalithaa crossed caste lines Thirumavalavan sudden praise

1372511
Spread the love

திருச்சி: “எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் சாதி எல்லைகளை கடந்தவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.

திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசியல் கடந்த 60 ஆண்டுகளாக எவ்வாறு இயங்கி வருகிறது, அது எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்ற உரையில் எம்ஜிஆர் பற்றி குறிப்பிட்டேன். எம்ஜிஆர் மீதும், ஜெயலலிதா மீதும் எனக்கு அதீதமான மதிப்பு உண்டு. அவர்களை பலமுறை மனம் திறந்து பாராட்டியுள்ளேன்.

தமிழ்நாடு அரசியல் கலைஞரை மையப்படுத்தி, எப்படி கலைஞர் எதிர்ப்பு அரசியலாக மாறியது என கலைஞர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நான் பேசினேன். அதில், எம்ஜிஆரை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை.

எம்ஜிஆரை ஒரு சாதிக்குள் நான் சுருக்கவில்லை. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையில் அதிமுக இயங்கியது. அது முழுமையாக கருணாநிதி எதிர்ப்பை மையப்படுத்தி இயங்கியதாக நான் கூறினேன். ஜெயலலிதா தன்னை பார்ப்பனப் பெண் என சட்டமன்றத்திலேயே வெளிப்படையாக கூறினார்.

அதனால் பார்ப்பனர்கள் அல்லது பார்ப்பனியம் என்போர் கலைஞரை எதிர்த்த அளவிற்கு, அதிமுகவையோ, எம்ஜிஆரையோ அல்லது ஜெயலலிதாவையோ எதிர்க்கவில்லை என்பதை தான் நான் கூறினேன். எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் சாதி எல்லைகளை கடந்தவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

மிகப்பெரிய கூட்டணி அமைக்க வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் ஆசையாகவும், அவருடைய முயற்சியாகவும் உள்ளது. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். திமுக கூட்டணியில் எந்த கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளது என்பது எனக்கு தெரியவில்லை.

கருத்து வேறுபாடுகள் இருக்கும், ஆனால் அது கூட்டணி உறவை சிதைக்கும் அளவு இருக்குமா என்பது எனக்கு தெரியவில்லை. திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு உள்ளது என எந்தப் பொருளில் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார் என்பதற்கு அவரிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *