எம்.எல்.ஏ டு முதலமைச்சர் …ஓ.பி.எஸ்-ஸின் அரசியல் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட முதல் தேர்தல் வெற்றி! | O. Panneerselvam first election story

Spread the love

அது 2001 செப்டம்பர் 21-ம் தேதி. ‘டான்சி’ ஊழல் வழக்கில் தண்டனை பெற்றிருந்த ஜெயலலிதாவுக்கு, ஆளுநர் பாத்திமாபீவி முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினால், அதிர்ந்துபோனார்கள் அதிமுகவினர். அரசியல் வட்டாரத்தில் ஏக பரபரப்பு. அதிமுகவுக்கு முழு பெரும்பான்மை பலம் இருந்ததால், ஆட்சிக்கு ஆபத்தில்லை. ஆனால், ஜெயலலிதாவுக்குப் பதில் வேறு ஒருவரை அக்கட்சி முதலமைச்சராக தேர்வு செய்ய வேண்டிய நிலை. 

இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் செல்லுமாறு அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும் உத்தரவு பறக்கிறது. இன்னொருபுறம், போயஸ் தோட்டத்தில் அவசர ஆலோசனை நடைபெறுகிறது. யாரை முதலமைச்சராக்கினால், அவர் நமக்கு கட்டுப்பட்டு நடப்பார், விசுவாசமாக இருப்பார்  என்கிற மந்திராலோசனையில் ஒருவர் பெயர் முடிவு செய்யப்படுகிறது. 

பன்னீர்செல்வம்

பன்னீர்செல்வம்

இந்த நிலையில், மாலை 3 மணியில் இருந்தே அதிமுக தலைமைக் கழகத்தில் குவியத் தொடங்கிய எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் அடுத்த முதலமைச்சராக அம்மா யாரை அறிவிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு. ஒருவருக்கொருவர் குசுகுசுவெனப் பேசிக்கொள்கிறார்கள். நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்காதா என்கிற ஏக்கமும் எதிர்பார்ப்புமாக இருக்கும் மூத்த அமைச்சர்கள் சிலர் ஒன்றுகூடி, ரகசியமாக  விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.   

இரவு 7 மணி வாக்கில் தலைமைக் கழகத்துக்கு வருகிறார் ஜெயலலிதா. அடுத்த சில நிமிடங்களில் கூட்ட அரங்குக்குச் சென்ற அவர், வழக்கில் தாம் வெற்றிபெறும் வரை முதலமைச்சர் பதவிக்கு வேறு ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதை விளக்கி, அப்பதவிக்கு தாம் முடிவு செய்த ஒரு நபரின் பெயரை அறிவிக்கிறார். அவர் பெயர் ஓ.பன்னீர்செல்வம். 

அந்தப் பெயரைக் கேட்டதும், அரங்கில் கூடி இருந்த ஒட்டுமொத்த எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சி. 2001 தேர்தலில் முதல்முறையாக பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வான பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டபோதே அதை ஆச்சரியமாகத்தான் பார்த்தார்கள் அதிமுக-வினர். தற்போது முதலமைச்சர் பதவியும் அவருக்கே என்பதை அதிமுக மூத்த அமைச்சர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவ்வளவு ஏன், எம்.எல்.ஏ-க்களுக்கு கூட அதிர்ச்சிதான். 

ஆனால், பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ-வாகவும் அமைச்சராகவும் ஆனதன் பின்னணியை அறிந்தவர்களுக்கு அத்தகைய அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. அமைதியானவர்; அடக்கமானவர்; விசுவாசமாக நடந்துகொள்வார் என பன்னீர்செல்வத்தின் மீது போயஸ்தோட்ட அதிகார மையத்துக்கு ஏற்பட்ட நம்பிக்கையே அவருக்கு இந்தப் பதவியைப் பெற்றுத்தந்தது. வேறு எந்தத் தகுதியும் கருத்தில்கொள்ளப்படவில்லை. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *