தெலுங்குத் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேந்திர பிரசாத் தெலுங்கு நடிகர் காந்தா ராவ் குறித்த பாராட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் உரையாற்றும்போது, காந்தாராவ் நடித்த கதாபாத்திரங்கள், அவர் நடித்த காலத்தில் இருந்த நடிப்பு தரம், சினிமாவுக்காக அவர் செய்த பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூர்ந்து அவர் பெருமையாக குறிப்பிட்டார். காந்தாராவைப் புகழ்ந்து பேசும் போது, “அவரது படங்களை பார்த்து தமிழ் நடிகர் எம்.ஜி.ஆர் கூட பயந்துபோய்விடுவார்” என்று கூறியதாக செய்திகள் வெளியாகின. இந்த கருத்து தான் தற்போது சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.

அந்த ஒப்பீடு எம்.ஜி.ஆரை குறைத்து பேசுவது போல இருந்ததாக பலர் குற்றச்சாட்டு எழுப்பினர். நடிகர் விஷால் தன் எக்ஸ் பதிவில், “சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் மூத்த நடிகர் ராஜேந்திர பிரசாத் பேசிய சில கருத்துகளை பார்க்கவும் கேட்கவும் மிகவும் அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது. எங்கள் அனைவராலும் மரியாதையுடன் நினைவுகூரப்படும் எம்.ஜி.ஆர் குறித்து அந்த மாதிரி பேசப்பட்டதை ஏற்க முடியவில்லை” என்று குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், “எனது அருமை நண்பர் ராஜேந்திர பிரசாத் காரு அவர்களுக்கு, நீங்கள் மூத்த நடிகர் காந்தா ராவின் கலையைப் பாராட்டிப் பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு கலைஞர் சக கலைஞரைப் பாராட்டுவது ஆரோக்கியமானது. ஆனால், அந்தப் பேச்சின் இடையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களை இழிவுபடுத்தும் விதமாக நீங்கள் செய்த ஒப்பீடு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதனால் ஒட்டுமொத்தத் தமிழர்களும் காயமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, உங்கள் தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த சக கலைஞர்களே இது குறித்து வருத்தம் தெரிவித்து எனக்கு ஆடியோக்களை அனுப்பியுள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகிற்கு இடையே பல ஆண்டுகாலப் பாரம்பரியமும், கலைப் பரிமாற்றமும் இருந்து வருகிறது. எம்.ஜி.ஆர் வெறும் நடிகர் அல்லது கலைஞர் மட்டுமல்ல. அவர் ஒரு மகத்தான தலைவர். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எங்களை ஆட்சி செய்தவர். ஆந்திராவின் மறைந்த முதல்வர் என்.டி.ஆர் அவர்கள் கட்சித் தொடங்கிய போது அவருக்கு முக்கிய ஆலோசகராக இருந்தவர் எம்.ஜி.ஆர். அரசியல் கடந்து நாங்கள் அவரை நேசிக்கிறோம், மதிக்கிறோம். எனவே, தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் என்ற பதவியைத் தாண்டி, திரையுலகின் ஒரு அங்கமாக உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் இதயத்திலிருந்து இதற்காக ஒரு மன்னிப்பைக் கோருங்கள். நீங்கள் அதைச் செய்வீர்கள் என நம்புகிறேன்,” எனத் தெரிவித்திருக்கிறார்.