வண்டிக்கு பெட்ரோல் நிரப்பிவர
வைகறை வேளையில் போனவரும்
வரிசையில் பசியுடன் காத்திருக்க
இருப்பு முடிந்ததென வந்த குரல்
இடி எனத் தலையில் இறங்கி விட
எல்லாரும்பதறிசிதறிஓடியதில்
நெரிசலில் கணவர் வீழ்ந்தார் என
எதிர் வீட்டுக்காரர் கூட்டி வந்தார்
ஆஸ்பத்திரி செல்ல ஆட்டோ இல்லை
வைத்தியம் பார்க்கவும் வழியில்லை
ஹோட்டலில் உணவுஇல்லைஎன்றார்
விடுதியில்இருவேளைமட்டுமென்றார்
வீடுகளில் எரிசக்தி தட்டுப்பாடு
வெளியில் வாட்டுகின்ற கட்டுப்பாடு
மார்க்கெட்டில் காய்கறிகள் அழுகி வீணாகும்
விற்காத உணவுப்பொருள் கெட்டு வீணாகும்
போக்குவரத்து நிலை தடுமாறி விடும்
பொது ஜன வாழ்க்கைவழிமாறிவிடும்
உண்ணாத வயிறுகள் சுருங்கிப் புண்ணாகும்
ஏழைகளின் வாழ்வு இனி இங்கே என்னாகும்?
போட்டா போட்டி போட்டு இங்கே
போர் நடத்தும் நாடுகளே! இன்று
பாமர மக்கள்படும் துன்பம்உங்கள்
மனதில் பதிவது எப்போது?
போர் நிலை முடிவது எப்போது?
இடிந்து விழுகின்ற கட்டிடங்கள்
மடிந்து கிடக்கின்ற நல்லுயிர்கள்
பற்றி எரிகின்ற நகரங்கள் உயிர்
பரிதவித்து கிடக்கின்ற மானுடங்கள்
எதுவும்கண்களில்படவில்லையா
விழியில் கருணை ஒளிஇல்லையா
இருவீர் வெல்லலும் இயற்கையும் அன்றே
ஒருவீர் தோற்பினும் தோற்பது
உம் குடியே என்ற எம் ஔவைக்கிழவியின்
கூற்றை
நீவிர் அறியாதவராயின் இம்மண்ணில்
உம் பிறப்பு வீணானதாகும்
நிகழும் உம் ஆட்சி கற்காலமாகும்
எரியாத அடுப்பின் முன் நின்று
எரியும் மனதுடன் பரிதவிக்கும்
பாமரர்கள் விடும் சாபத்தின் அம்பு
அதிகாரத்தை துளைத்து கொடும்
அக்கிரமங்களை அழித்துதகர்த்து
நன்னெறி புகட்டும் நாள் இனி
வெகு தூரத்தில் இல்லை நாளை
விடியும் பொழுது அமைதி சூழலை
ஒளியாய் தரும் என்று நம்புவோம்!
-கோவையிலிருந்து உங்கள்
நீலவேணி தேவராஜன்