சென்னை : சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டது போன்று பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் ரூ.1 கோடியே 61 லட்சத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக மரப்பாதை அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளது.
மாற்றுத்திறனாளிகளும் கடல் அலையை ரசிக்க வேண்டும். தங்கள் கால்களை கடல் அலையில் நனைத்து மகிழ வேண்டும். அதற்கான வசதிகளை அரசு ஏற்படுத்த வேண்டும் என்பது மாற்றுத் திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இதை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிர்வாகம், மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் சிறப்பு சுற்றுச்சூழல் அனுமதி பெற்று சென்னை மெரினா கடற்கரையில் 380 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் மரப்பாதை அமைத்து கொடுத்துள்ளது.
இது மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து இதேபோன்று பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையிலும் அமைத்து தர வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் ரூ.1 கோடியே 61 லட்சத்தில் 190 மீட்டர் நீளம், 2.90 மீட்டர் அகலம் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக மரப்பாதையை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வந்து. தற்போது அப்பணிகளை தொடங்கியுள்ளது.
இப்பணிகளுக்கும் மாநகராட்சி சார்பில் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளது. அதில் அந்த இடம் ஆமை முட்டையிடும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், கான்கிரீட் கட்டுமானங்கள் எதையும் செய்யக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் 100 சதவீதம் மரக்கட்டைகளால் இந்த பாலம் அமைக்கப்பட இருப்பதாகவும், பணிகள் 4 மாதங்களில் முடிக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.