எல்பிஜி வாடிக்கையாளர்கள் e-KYC சமர்ப்பிக்க மார்ச் 31 கடைசி நாளா? – அதிகாரிகள் விளக்கம் | Is March 31 the last day for LPG customers to submit e-KYC? – Officials explain

1351668.jpg
Spread the love

சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வரும் மார்ச் 31-ம் தேதி கடைசி நாள் என சமூக வலைதளங்களில் பரவும் செய்திக்கு, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்யும் பணியை இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறு சமையல் எரிவாயு சிலிண்டரை பெறும் வாடிக்கையாளர்களின் விவரங்களை எண்ணெய் நிறுவனங்கள் சேகரித்து வருகின்றனர். ஆன்லைன் மூலம் (இ-கேஒய்சி) வாடிக்கையாளர் விவரங்கள் சேகரித்து, சரிபார்க்கப்பட்டு வரப்படுகிறது.

இந்நிலையில், ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர் விவரங்களை சமர்ப்பிக்க வரும் மார்ச் 31-ம் தேதி இறுதி நாள் எனவும், எனவே காலக்கெடு முடிவதற்குள் வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களை தங்கள் ஏஜென்சிகளிடம் சென்று தெரிவிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறும்போது, “தமிழகம் முழுவதும் 2.10 கோடி சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில், உண்மையான வாடிக்கையாளர்கள் யார் என்பதை கண்டறிந்து, போலிகளை களைவதற்காக, வாடிக்கையாளர்களின் விவரங்கள் ஆன்லைன் மூலம் சேகரிக்கப்பட்டு வரப்படுகிறது.

இதன்படி, வாடிக்கையாளர்கள் தங்களுடைய கேஸ் ஏஜென்சிக்கு சென்று ஆதார் கார்டு மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது, அவர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி வரும். இதன்மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். கேஸ் ஏஜென்சிகளுக்கு நேரில் செல்ல முடியாத வாடிக்கையாளர்களுக்கு ஏஜென்சி ஊழியர்கள் அவர்களது வீட்டுக்கே சென்று விவரங்களை சேகரிப்பர்.

இதுவரை, மொத்த வாடிக்கையாளர்களில் தற்போது 65 சதவீதம் பேர் தங்களுடைய விவரங்களை சமர்ப்பித்துள்ளனர். மேலும், இந்த விவரங்களை சமர்ப்பிக்க காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே, சமூக வலைதளங்களில் இதுகுறித்து பரவும் தகவல் தவறானது,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *