கொங்கு மண்டலத்தில் அதிமுகவிடம் இழந்த தொகுதிகளை மீட்க, திமுக கூட்டணியில் இடம்பெற்று, தீவிரமாக களமாடி வருகிறது கொமதேக. கரூர் சம்பவத்தால், ‘கொங்கு மண்டலத்தில் திமுக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படுமா’ என்பதில் தொடங்கி, ‘தொகுதி மாறி போட்டியிடப் போகிறீர்களா’ என்பது வரை, எல்லாக் கேள்விகளுக்கும், தனது இயல்பான பாணியில், பதில் அளித்துப் பேசினார் கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ.. அவரது பேட்டியில் இருந்து…
கரூர் சென்று இருந்தீர்களா… அங்குள்ள மக்களின் மனநிலை எப்படி உள்ளது?
அசம்பாவித சம்பவம் நடந்த அடுத்த நாள் காலை கரூர் சென்று வந்தேன். அப்போது, எல்லா கட்சித் தலைவர்களும் வந்து பார்த்து சென்றனர். ஆனால், இந்த சம்பவத்திற்கு காரணமான தவெகவினர் யாரும் அங்கு இல்லை. அக்கட்சிக்கு கட்டமைப்பு இல்லை என்பதை அப்போது புரிந்து கொண்டேன். அங்குள்ள எல்லோரிடமும் வருத்தமும்,சோகமும் இருந்தது. ஆனால், இன்னும் இரண்டு மாதம் சென்றால், இன்னொரு பெரிய சம்பவம் நடந்தால்,
மக்கள் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள்.
கரூர் சம்பவத்தால் கொங்கு மண்டலத்தில் திமுக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படுமா?
அரசியல் ரீதியாக இருதரப்பும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தேர்தலில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்பவில்லை.
கரூரில் 41 பேரை அடித்துக் கொன்று விட்டனர் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருப்பது சர்ச்சையாக உள்ளதே?
இந்த கருத்தை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவர் தெரிவித்தது கடுமையான கருத்துதான் என்றாலும், தவறி வந்து விட்டதாகவே கருதுகிறேன். மேலும், இதுபோன்று பேசுவதால் எந்த பயனும் பாஜகவுக்கு கிடைக்கப் போவதில்லை.
ஊர், தெருக்களுக்கு சாதி பெயர் கூடாது என்ற அரசாணைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளதே?
எல்லா அரசுகளும் இது போன்ற முயற்சிகளை எடுத்துள்ளன. அதனால் சாதி எல்லாம் மறைந்து, சமூக நீதி வந்துவிடும் என்று சொல்ல முடியாது.
ஜிஎஸ்டி விதிப்பால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டதாக கூறி வந்தீர்கள். இப்போது ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறீர்களா?
தற்போது ‘ஸ்லாப்’பில் தான் மாற்றம் செய்துள்ளார்கள். இதனால் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. மற்ற நாடுகளைப் போல், எல்லா பொருட்களுக்கும் 6 சதவீத ஜிஎஸ்டி என்று அறிவித்தால் மட்டுமே, மாற்றம் என்று சொல்ல முடியும். அதனால் மட்டுமே பலன் கிடைக்கும்.
கொங்கு வேளாளருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு, கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என்பது போன்ற உங்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லையே?
இந்த இரு கோரிக்கைகள் குறித்து போராட்டங்களை நடத்தியுள்ளோம். சட்டசபையில் பேசி வலியுறுத்தி உள்ளேன். இந்த முயற்சி தொடரும்.
கடந்த 2017-ல் இருந்து திமுக கூட்டணியில் இருந்தும் உங்கள் பிரதான கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையே?
கோவை மேம்பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டித்தல், எல் அண்ட் டி ஆறுவழிச்சாலை விரிவாக்கம், சேலம் – உளுந்தூர்பேட்டை நான்கு வழி சாலை என எங்களது பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதோடு, டாஸ்மாக் மது பாட்டில்களை பொது இடங்களில் வீசுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சட்டசபையில் பேசியதால், அதற்கு ஒரு தீர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. கொள்கை ரீதியான சில விஷயங்கள் பரிசீலனையில் உள்ளன.
கடந்த சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள 39 தொகுதிகளில், 23 தொகுதிகள் அதிமுக வசம் உள்ளன. அவற்றை மீட்க என்ன வியூகம் வகுத்துள்ளீர்கள்?
திமுக கூட்டணி சார்பில் தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளோம். எனவே, வரும் தேர்தலில் நல்ல ‘ரிசல்ட்’ இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதே நேரத்தில் கொங்கு மண்டலத்தில், பாலம், சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிறைவேற்றியது போல், நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத நீர்பாசனத் திட்டங்களுக்கு அரசு முக்கியத்துவம் தர வேண்டும். திருமணிமுத்தாறு, பாண்டியாறு – புன்னம்புழா, மேட்டூர் உபரிநீர் திட்டம், ஆனைமலையாறு – நல்லாறு, வசிஷ்ட நதி இணைப்பை உதாரணமாக கூறலாம்.
தவெக வருகையால் எந்த கட்சிக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என நினைக்கிறீர்கள்?
அரசின் மீதான அதிருப்தி வாக்குகள், அக்கட்சிக்குச் செல்லும். இது திமுக கூட்டணிக்கு சாதகமாக அமையும். தவெகவில் உள்ள இளைஞர்கள் கட்சிகளில் இல்லாதவர்கள். புது வாக்காளர்கள். இந்நிலையில், எல்லா கட்சி வாக்குகளையும் தவெக பிரிக்கும். நாம் தமிழர் கட்சி வாக்குகளை கூடுதலாகப் பிரிப்பார்கள்.
அதிமுக – பாஜக கூட்டணியில் தவெக இணையும் என்பது போன்ற தகவல்கள் வருகின்றன. ஒருவேளை அப்படி இணைந்தால் அது பலமான அணியாக இருக்குமா?
யூகத்தின் அடிப்படையில் பேசி பிரயோஜனம் இல்லை. இருந்தாலும், இது போன்ற கூட்டணி அமைந்தால் கொஞ்சம் ‘பைட்’ கொடுப்பார்கள். இதனால் அவர்களது வாக்கு சதவீதம் கொஞ்சம் அதிகமாகலாம். வெற்றி வித்தியாசம் எங்களுக்குக் குறையலாம்.
எல்லாக் கட்சிகளும், கூடுதல் தொகுதிகளைக் கேட்கத் தொடங்கி விட்டனர். நீங்களும் கேட்பீர்களா?
அது தேர்தல் நேரத்தில், கூட்டணி தலைவரிடம் கேட்க வேண்டியது. பத்திரிகையில் கேட்க முடியாது.
கொமதேகவில் இருந்து விலகி, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் முன்னிலையில், ஆயிரக்கணக்கானோர் இணைந்ததாக செய்தி வெளியாகி இருக்கிறதே?
எங்களது கட்சியில் மாவட்ட செயலாளராக இருந்த ஒருவரை நான்கு மாதங்களுக்கு முன் நீக்கி விட்டோம். அவரோடு சேர்ந்து மொத்தம் 11 பேர் போயிருக்கிறார்கள். மேலும் கட்சியில் இணைந்தவர்கள் என இபிஎஸ் கொடுத்த 41 பேர் லிஸ்டில், 11 பேர் தான் அங்கு வந்துள்ளனர். நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. நாங்கள் வெளியில் அனுப்பிய ஒருவரை, வேறு கட்சியில் சேரக்கூடாது என்று சொல்ல முடியுமா? சேர்ந்த இடத்திலாவது, அவர் நன்றாக வேலை பார்க்கட்டும்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், திருச்செங்கோடு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாறப்போகிறீர்கள் என தகவல் வருகிறதே?
திருச்செங்கோடு தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். நான் ஏன் தொகுதி மாற வேண்டும்?