எல்லை மீறும் பரிசல் ஓட்டிகள்… கூடுதல் கட்டணம் வசூலித்து காவிரி ஆற்றில் பரிசல் பயணம்!

Dinamani2f2024 10 132fvr9ro7w52fpennakaram.jpg
Spread the love

பென்னாகரம்: காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 17,000 அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், கூட்டாறு பகுதியில் கள்ளத்தனமாக சுற்றுலாப் பயணிகளிடம் ஒப்பந்ததாரர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூல் செய்து தடையை மீறி காவிரி ஆற்றில் பரிசல் பயணத்திற்கு அழைத்துச் செல்வதாக சுற்றுலாப் பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவி பகுதிக்கு தொடர் விடுமுறை முன்னிட்டு 50,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.சுற்றுலா பயணிகளின் வருகையினால் ஒகேனக்கலின் முக்கிய இடங்களான முதலைப் பண்ணை, வண்ண மீன்கள் காட்சியாகம், உணவருந்தும் பூங்கா, மீன் விற்பனை நிலையங்கள், பிரதான அருவிச் செல்லும் நடைபாதை என பல்வேறு இடங்களில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

தமிழக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாற்றா பாளையம், கேரட்டி, கெம்பாகரை, பிலிகுண்டுலு, மொசல்மடுவு, ராசி மணல் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது திடீரென கனமழை பெய்து வருகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை மதிய நிலவரப்படி வினாடிக்கு 17,000 கன அடியாக நீர்வரத்து அதிகரித்ததால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் தடை விதித்தார். தடை உத்தரவின் காரணமாக பிரதான அருவி செல்லும் நடைபாதை,சின்னாறு பரிசல் துறை பூட்டப்பட்டது.

ஏற்கனவே, காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள், அருவிகளில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை காவலர்கள் உடனடியாக வெளியேற்றியும், ஒலிபெருக்கியின் மூலம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டு வந்திருந்தனர்.

இருப்பினும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்ததால் பரிசல் பயணம் மேற்கொள்ள முடியாமல் திரும்பிச் சென்று கொண்டிருந்தனர்.

இதையும் படிக்க |மீன் பிடி வலையில் சிக்கிய ஒன்றரை அடி உயர செப்பு கலசம்

இதனிடையே, பெயரளவிற்கு சின்னாறு பரிசல் துறை பூட்டப்பட்டது. அந்தப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஒப்பந்ததாரர்கள் மற்றும் பரிசல் இயக்க கண்காணிப்பாளர்கள்,ஏற்கனவே சுற்றுலாப் பயணிகளிடம் வழங்கப்பட்டிருந்த பயணக் கட்டண நுழைவு சீட்டினை பெற்றுக்கொண்டு கூட்டாறு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை பரிசல் ஓட்டிகள் அழைத்து வந்து பரிசல் கட்டணம் ரூ.1500 மற்றும் கூடுதலாக ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலித்து தடையை மீறி காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கின்றனர்.

தடையை மீறி பரிசல் பயணத்தின் போது ஏற்கனவே பரிசல் பயணம் மேற்கொள்வது போல் அரசின் பாதுகாப்பு உடைகளை சுற்றுலாப் பயணிகளுக்கு அணிவிப்பதால் விடுமுறையை கொண்டாடுவதற்காக ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் கூடுதல் கட்டணத்தை செலுத்தி ஆபத்தான முறையில் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

எனவே காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக மாவட்ட நிர்வாகம் விதித்திருந்த தடையினை மீறி சுற்றுலாப் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து பரிசல் இயக்கும் பரிசல் ஓட்டிகளின் உரிமத்தை ரத்து செய்தும், அதற்கு துணை நிற்கும் ஒப்பந்ததாரர்கள், பரிசல் இயக்க கண்காணிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கையாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *