ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் அணியும் – பார்சிலோனா அணியும் கிங் அப்துல்லா ஸ்போர்ட்ஸ் சிட்டி திடலில் மோதின.
இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் பார்சிலோனா அணி தொடக்கம் முதலே கோல் அடிக்க முயன்றுகொண்டே இருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக பந்து ரியல் மாட்ரிட்டின் கிளியன் எம்பாபேவிடம் செல்ல, போட்டியின் 5ஆவது நிமிஷத்திலேயே அதை கோலாக மாற்றினார்.
அடுத்து பார்சிலோனாவின் இளம் வீரர் லாமின் யாமல் 22 ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 1-1 என சமன்படுத்தினார்.
பார்சிலோனா வீரர் கவியை வேண்டுமென்றே இடித்ததால் ரியல் மாட்ரிட்டின் கமவிங்காவுக்கு மஞ்சள் கார்டு கொடுக்கப்பட்டது. அதனால் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் 36ஆவது நிமிஷத்தில் லெவண்டாவ்ஸ்கி அதில் கோல் அடித்து அசத்தினார்.
தொடர்ச்சியான கோல்கள் மழை
அடுத்ததாக 39ஆவது நிமிஷத்தில் ரஃபினா தனது தலையால் அற்புதமான ஹெட்டரினால் பார்சிலோனாவின் 3ஆவது கோலை அடித்து கலக்கினார். காயத்தினால் வெளியேறிய பார்சிலோனா வீரர் இனிகோ மார்டினீஸுக்கு ஆக்ரோஷமாக பேசியதால் கள நடுவர் மஞ்சள் அட்டையை கொடுத்தார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் ரியல் மாட்ரிட்டிக்கு கிடைத்த கார்னர் கிக் பார்சிலோனாவுக்கு சாதகமானது. ரஃபினா உதவியின் மூலம் அலீஜாண்ட்ரோ பால்டே 45+10 ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.
முதல் பாதி முடிவின் பார்சிலோனா 4-1 என முன்னிலையில் இருந்தது. முதல்பாதிவரை பந்து 67 சதவிகிதம் பார்சிலோனா அணியிடம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் பாதியில் முயற்சித்த ரியல் மாட்ரிட்
இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் 48ஆவது நிமிஷத்தில் ரஃபினா மீண்டும் ஒரு கோல் அடித்தார்.
57ஆவது நிமிஷத்தில் பார்சிலோனா கோல் கீப்பர் வோஜ்சீச் ஸ்செஸ்னிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. அதனால் 10 வீரர்களுடன் விளையாடத் தொடங்கியது பார்சிலோனா.
ரியல் மாட்ரிட் அணியின் ரோட்ரிகோ 60ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.
இரண்டாம் பாதியில் பெரும்பாலான நேரம் பந்து ரியல் மாட்ரிட் அணியினரிடமே இருந்தது.
96ஆவது நிமிஷத்தில் கிளியன் எம்பாபே அடித்த பந்தினை பார்சிலோனா அணியின் கோல் கீப்பர் அற்புதமாக தடுத்தார். இறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணி வென்றது.
இதன்மூலம் ஸ்பானிஷ் கோப்பையை வரலாற்றில் அதிகமுறை (15 முறை) வென்ற அணியாக பார்சிலோனா அணி இருக்கிறது. ரியல் மாட்ரிட் அணி 13 முறை வென்றுள்ளது.