இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
‘ஞானபீடம், பத்ம பூஷன், சாகித்ய அகாதெமி உள்ளிட்ட உயர் விருதுகளை வென்ற மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் மறைந்த செய்தியறிந்து வருந்துகிறேன்.
நாலுகெட்டு, அசுரவித்து, மஞ்ஞு, காலம் போன்ற நாவல்கள், நிர்ம்மால்யம், பெருந்தச்சன், ஒரு வடக்கன் வீரகாத போன்ற திரைப்படங்கள் வழியே கேரள மாநிலத்தின் சமூக மாற்றங்களை மிக நுணுக்கமாகப் படம்பிடித்துக் காட்டிய படைப்பாளராக அவர் திகழ்ந்தார்.
தமிழ், ஆங்கிலம் முதலிய பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது நூல்களின் வழியே, மலையாளிகளைக் கடந்த பெரும் வாசகப் பரப்பைச் சொந்தமாக்கிக் கொண்டவர் அவர்.
மலையாளத் திரையுலகின் கிளாசிக்குகள் எனக் கருதப்படும் பல படங்களுக்கு வாசுதேவன் திரைக்கதை எழுதியதோடு, தாமே சில படங்களை இயக்கவும் செய்திருக்கிறார், தேசிய விருது முதலிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
எழுத்தாளர், திரைக்கதையாசிரியர், இயக்குநராக மட்டுமன்றி மாத்ருபூமி இதழின் ஆசிரியராக இருந்து, பல இளம் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு வளர்த்தெடுத்த வகையில் மலையாள மொழிக்கும் கேரளச் சமூகத்துக்கும் அவர் ஆற்றிய பங்களிப்புகள் பல தலைமுறைகளுக்கு அவரது பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கும்.
நவீன மலையாள இலக்கியத்தின் முகங்களுள் ஒருவராக விளங்கிய எம்.டி. வாசுதேவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உலகம் முழுவதும் உள்ள அவரது வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.