எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் காலமானார்!

Spread the love

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழ் பின்நவீனத்துவ இலக்கிய ஆக்கங்களை எழுதியவர்களில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களில் ஒருவரான ரமேஷ் பிரேதன் உடல்நலக்குறைவால் புதுச்சேரியில் இன்று காலமானார்.

நண்பர்களான பிரேம் – ரமேஷ் ஒருவரும் இணைந்து ஒரே பெயரில் எழுதிவந்தனர். இவர்களின் எழுத்தில் ‘ஒருகாலத்தில் நூற்றியெட்டுக்கிளிகள் இருந்தன’, ‘கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள்’, ’இருபது கவிதைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளும்’ ஆகியவை குறிப்பிடத்தகுந்த ஆக்கங்களாக கருதப்படுகிறன.

பிரேமுடனான நட்பு முறிந்த பின், ரமேஷ் தொடர்ந்து ரமேஷ் பிரேதன் என்கிற பெயரில் சிறுகதைகள், கவிதைகள் உள்ளிட்டவற்றை எழுதிவந்தார். இவரின், ‘நல்ல பாம்பு’ நாவல் விமர்சகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றது.

அண்மையில், விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு 2025 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருதை ரமேஷ் பிரேதனுக்கு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், நீண்ட காலமாக உடல்நிலை பாதிப்பிலிருந்த ரமேஷ் பிரேதன் இன்று புதுச்சேரியில் காலமானார். இவரது மறைவிற்கு எழுத்தாளர்கள், வாசகர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

– மரணத்தின் பரிமாணம் (ரமேஷ் பிரேதன் கவிதை)

ஆடையெரிந்துக் கரிந்த உடம்பில் தீக்காயங்கள் ஆங்காங்கே பூத்துக் கனன்றன வாழை இலையில் கிடத்தப்பட்டிருந்தாள் வலியில் அனத்தியபடி சுற்றி நிற்பவரைப் பார்த்தாள் சுவரில் தொங்கிய சாமிப்படத்தில் பார்வை நிலைக்குத்தியது முருகா என்னைக் கொன்றுவிடு முணுமுணுத்து அடங்கினாள்என்று எழுதியவர் பெயர் மறந்துவிட்ட சிறுகதையின் இறுதி வரிகளை படிக்கும்போதெல்லாம் யாரோவொருவர் செத்துக்கொண்டிருக்கிறார்

ஆம்,மரணத்தை முன்நிறுத்தியே எனது கதையை எழுதத் தொடங்கினேன் மரணம் பற்றிய சொல்லாடலே வரலாற்றைக் கட்டமைக்கிறது

என்றோ எங்கோ ஒரு கதையில் கொளுத்திக்கொண்டு செத்தவள்என்றென்றைக்கும் பிணமாகவே அற்றுப்போகாமல் நிலைத்திருக்கிறாள்

என்னை எல்லாமாகப் பார்த்தவன் பிணமாகப் பார்க்கமுடியாது என்ற இயலாமையின் ஏக்கத்துடன் வாழ்கிறேன்

ஒரு கதையில் செத்துவிடலாம் அதுபோதும் வரலாற்றில் எங்கோவோர் இடத்திலிருந்து எனது பிணத்தைப் பார்த்துக்கொண்டிருக்கலாம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *