கொரோனா காலகட்டம் என் எழுத்து உலக பயணத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்தது எனலாம். கணையாழி, காலச்சுவடு இதழ்களில் கவிதைகளை எழுதியுள்ளேன். அதுமட்டுமில்லாமல், ஆனந்த விகடன் சொல்வனம் பகுதியிலும், எனது கவிதை வெளியாகி இருக்கிறது.
இதழ்களில் எழுத ஆரம்பித்த பிறகு எழுத்தாளரும், கல்கி ஆசிரியருமான அமிர்தம் சூர்யா அவர்கள் தான் எனக்கு உற்சாகத்தை தந்து பதிவிட்ட கவிதைகளை புத்தகமாக வெளியிட ஊக்குவித்தார். அதன் வெளியீடு தான் “நிழல்களின் இதயம்”, “மௌனக்கூத்து” ஆகிய கவிதை புத்தகங்களாக வெளிவந்தன. பிறகு அமெரிக்கா சென்றபோது எனது ஊரின் தலைப்பில் “வைகை கண்ட நயாகரா” என்ற தலைப்பில் பயண புத்தகத்தை வெளியிட்டேன்.
எதைப் பற்றியது கெங்கம்மா?
நான் எழுதிய முதல் நாவலான கெங்கம்மா, ஆண்டிப்பட்டி அருகே வாழும் தமிழ்நாட்டின் பழங்குடிகளான தொம்பர் இன பழங்குடி மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டது. உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் கெங்கம்மா எப்படி தனது சமூகத்தினரை மீட்டெடுக்கிறாள் என்பதுதான் இதன் கரு. அடுத்த நாவலும் தயாராகிக் கொண்டிருக்கிறது அதை நீங்கள் இன்னும் சில மாதங்களில் எதிர்பார்க்கலாம்.
என்னை மாற்றிய எழுத்துக்கள்..!
என்னைப் பற்றி எனது குடும்பத்திற்கும் எனது புகுந்த குடும்பத்திற்குமே பெரிய அளவில் தெரியாது. அவர்களை பொறுத்தவரையில் நான் ஒரு குடும்பப் பெண், இல்லத்தரசி அவ்வளவுதான். என்னை மிகப் பெரிய இடத்திற்கு கொண்டுவந்தது இந்த எழுத்து உலகம் தான். சென்னை மாநகரம் என்னை செதுக்கி இருக்கிறது என்றும் கூறலாம். முற்போக்கு சிந்தனையின் மீது பெரியார் அம்பேத்கர் குறிப்பாக மார்க்ஸியத்தின் மீது எனக்கு அளவு கடந்த ஈடுபாடு உள்ளது.
எனது எழுத்துக்கள் சமூகத்தை சமத்துவ பாதையை நோக்கி நடை போட வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.” என முடித்தார்.