எஸ்எம்சி குழுக்கள் மறுகட்டமைப்பு திருத்தப்பட்ட அட்டவணை வெளியீடு | SMC Groups Restructuring Revised Schedule Release

1281792.jpg
Spread the love

சென்னை: அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) மறுகட்டமைப்பு பணிகளுக்கான கால அட்டவணையில் பள்ளிக் கல்வித் துறை மாற்றம் செய்துள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்ட விதிகளின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) 2022-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையே, ஏற்கெனவே நியமிக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுவின் பதவிக் காலம் நடப்பு ஜூலை மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து 2024-26-ம் ஆண்டுகளுக்கான புதிய உறுப்பினர்களைக் கொண்டு எஸ்எம்சி குழு மறு கட்டமைப்பு செய்யப்படவுள்ளது. இதற்கான கால அட்டவணை, வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுவிட்டன.

தற்போது அதில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி எஸ்எம்சி குழு குறித்து பெற்றோருக்கான விழிப்புணர்வு கூட்டம் ஜூலை 28-ல் இருந்து ஆகஸ்ட் 2-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்க பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு வாட்ஸ்அப், துண்டு பிரசுரங்கள் மற்றும் மாணவர்கள் மூலமாக ஜூலை 31-ம் தேதிக்குள் அழைப்பு விடுக்க வேண்டும். இதையடுத்து, மாநிலம் தழுவிய எஸ்எம்சி மறுகட்டமைப்பு நிகழ்வுக்கான அட்டவணையும் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 10-ம் தேதியும், தொடக்கப் பள்ளிகளுக்கு 17, 24-ம் தேதிகளிலும், உயர்நிலைப் பள்ளிகளுக்கு 31-ம் தேதியிலும் மறுகட்டமைப்பு பணிகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *