சென்னை: எஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக சார்பில் வரும் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்தார். சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவன், அபுதாபியில் நடைபெற உள்ள குத்து சண்டை போட்டியில் பங்குபெற உள்ள இரண்டு வீராங்கனைகளுக்கு தலா ரூ. 75 ஆயிரம் வழங்கிய பின் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் என இரண்டு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து எஸ்ஐஆர் திட்டத்தை கொண்டு வந்து உள்ளனர்.
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளை கைவிட வேண்டும் என விசிக தொடரந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கு காரணம், மிக குறுகிய காலம் மட்டுமே உள்ளது. குறுகிய காலத்தில் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்ப்பது சவாலாக உள்ளது.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கண்டித்து வரும் 24-ம் தேதி விசிக சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் இன்னும் அரசியல் களத்துக்கு முழுவதும் வரவில்லை. தவெக தலைவர் விஜய் எஸ்ஐஆர் குறித்து பேசி விடியோவில் பாஜகவை பற்றி பேசவில்லை. தவெக கருத்து முரணாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.