சாத்தூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சாத்தூர் அருகே கிராம மக்கள் இன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. இதற்காக, வாக்காளர்களுக்கு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 14,62,874 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக்கொள்வதை எளிதாக்குவதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களைக் கண்டறிவதற்கு உதவி செய்வதற்காகவும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நேற்று சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ராமுத்தேவன்பட்டி கிராமத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கருப்புக்கொடி ஏந்தி ஊர்வலமாகச் சென்றும் வீடுகளின் முகப்புகள், பொது இடங்களிலும் கருப்புக்கொடி கட்டியும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தேர்தல் ஆணையம் வழங்கிய வடிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள் எதுவும் எங்களுக்குப் புரியவில்லை. பலதரப்பட்ட விவரங்கள் தெரியவில்லை. தேர்தல் ஆணையம் வழங்கிய இந்த படிவத்தினை திரும்ப பெற வேண்டும். கிராம மக்கள் அனைவரும் கூலி வேலைக்குச் செல்பவர்கள். இப்படிவத்தை பூர்த்தி செய்ய வேலைக்குச் செல்லாமல் ஒரு நாள் செலவிட வேண்டியுள்ளது. இதனால் வருமானம் பாதிக்கப்படுகிறது. மேலும், 23 ஆண்டுகளுக்கு முன்பு வாக்களித்த விவரம் கேட்டக்கப்பட்டுள்ளது. அந்த விவரங்களை கிராம மக்கள் பலர் எடுக்க முடியவில்லை. பல நேரம் சர்வர் பிரச்சினை ஏற்படுகிறது.
எனவே, ஏழை, எளிய மக்கள் வாக்களிக்கும் உரிமையை பறிக்காமல், எளிதாக வாக்களிக்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். தகுதியுள்ள எந்த வாக்காளரும் விடுபடக் கூடாது. இதில், தேர்தல் ஆணையம் முழு கவனம் செலுத்த வேண்டும். எனவே, தற்போது வழங்கப்பட்டுள்ள படிவத்தில் உள்ள குழப்பங்களுக்களை நீக்கி எளிய வகையில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
பொதுமக்கள் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், அப்பகுதியில் அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.