எஸ்ஐஆர் படிவங்களை திமுகவினருக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும் அதிமுகவினருக்கு கொடுக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு திமுக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அரசைக் கண்டித்து விரைவில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு வெளிப்படையான வாக்காளர் பட்டியல் உருவாகும் என்பதற்காக தான் எஸ்ஐஆரை ஆதரித்தோம். ஆனால் தேர்தல் ஆணையத்தின் நல்ல நோக்கத்தை சிதைக்கும் வகையில் திமுக அரசு படிக்காதவர்களையும், திமுகவினரையும் பிஎல்ஓக்களாக நியமித்து, எஸ்ஐஆர் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
திமுகவினருக்கு மட்டுமே எஸ்ஐஆர் படிவம் கொடுக்க வேண்டும், அதிமுகவினருக்கு படிவங்களை கொடுக்க கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு திமுக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், எஸ்ஐஆர் பணியில், ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையில், திமுக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
வீடு வீடாக படிவங்களை கொடுப்பதும், பூர்த்தி செய்த படிவங்களை பெறுவதும் பிஎல்ஓக்களின் வேலை. ஆனால் பிஎல்ஓக்களை மிரட்டி, படிவங்களை திமுகவினர் மொத்தமாக பெற்றும், ஒரே இடத்தில் அமர்ந்து, அவர்களுக்கு வேண்டியவர்களின் படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்கின்றனர். சென்னையில் பல இடங்களில் வீடு வீடாக செல்வதில்லை. சோழிங்கநல்லூர் பகுதியில் படிவங்கள் விநியோகம் முதல் நாள் 13 சதவீதம், 2-வது நாள் 31 சதவீதமாக இருந்த நிலையில், 3-வது நாள் 56 சதவீதமாக உயர்ந்துள்ளது. படிவங்களை விதிகளை மீறி வழங்கினால் தான் இப்படி விநியோகிக்க முடியும்.
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் திமுகவின் பிஎல்ஏ- 2 ஆக நியமிக்கப்பட்ட ஒரு நபர், இன்னொரு வாக்குச்சாவடியில் தேர்தல் ஆணையத்தின் பிஎல்ஓ ஆக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக வாக்குகளை நீக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு பிஎல்ஓக்களாக படிக்காதவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிஎல்ஓ சார்பில் பெண் ஒருவர், முதல்வர் ஸ்டாலின் படம் போட்ட பையில் படிவங்களை வைத்துக்கொண்டு விநியோகம் செய்கிறார். காலில் அடிபட்டு நடக்க முடியாதவர்களை பிஎல்ஓ ஆக நியமித்துள்ளனர்.
இவர்களால் எப்படி வீடு வீடாக சென்று படிவங்களை கொடுக்க முடியும். சென்னை மட்டுமல்லாது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் எஸ்ஐஆர் பணியில் விதிமீறல்கள் நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டு அதிமுக வாக்காளர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல். இதை கண்டித்து அதிமுக சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது, மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, ஆதிராஜாராம், ஆர்.எஸ்.ராஜேஷ், டி.நகர் சத்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.