எஸ்ஐஆர் படிவத்தை நிரப்பித்தர மக்களுக்கு திமுகவினர் உதவுவதில் எந்தத் தவறும் இல்லை என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 13 இடங்களில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் கே.என்.நேரு ரூ.406.63 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது: எஸ்ஐஆர் கணக்கெடுப்புக்கு வாக்குச்சாவடி முகவர்கள் செல்லலாம் என தேர்தல் ஆணையமே அனுமதி கொடுத்துள்ளது. அதில் என்ன தவறு உள்ளது? மற்ற கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள் வருவதை யாரும் தடுப்பதில்லை. படிவத்தை நிரப்பித் தர திமுகவினர் உதவுவதில் எந்த தவறும் இல்லை. அதிமுகவினர் உதவி செய்ய செல்லவில்லை என்றால் திமுகவினரும் செல்ல கூடாது என்று கூறினால் எப்படி? நாளை ஒருவேளை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் ஆட்சியில் இருப்பவர்கள் ஏன் இதை கவனிக்கவில்லை என்று எங்கள் மீதுதான் குற்றம் சாட்டுவார்கள். நாங்கள் சரியாகத் தான் இப்பணிகளை செய்து வருகிறோம்.
மத்திய அரசு ஜல்ஜீவன், நூறு நாள் வேலை திட்டம், மெட்ரோ, ஜிஎஸ்டியில் பங்கு என எதற்கும் நிதி ஒதுக்குவதில்லை. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 12 திட்டங்கள் நிதி ஒதுக்காததால் செயல்படுத்த முடியாமல் உள்ளது. அவர்கள் திட்டங்கள் கொடுத்தால் நாங்கள் ஏன் வேண்டாம் என்று சொல்கிறோம்.
‘திமுக நல்லவர் போல் நடிப்பதை நாடே பார்த்து சிரிக்கிறது’ என தவெக தலைவர் விஜய் கூறுகிறார். விஜய்க்கு வேண்டுமானால் திமுக ஆட்சி, நல்லவர்கள் போல வேஷம் போடுவது போல தெரியலாம். ஆனால் நாட்டு மக்களுக்கு, திமுகவும், திமுக ஆட்சியும், முதல்வரும் நல்லவர்களாகவே தெரிகிறார்கள். திமுக நல்லவர் போல வேஷம் போடவில்லை. உண்மையாக நல்லவர்களாக இருப்பதால்தான் அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்கள் அனைவரும் முதல்வரை வரவேற்கிறார்கள். 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் மீண்டும் திமுகவே ஆட்சிக்கு வரும். 210 தொகுதிகளில் வெல்வோம் என கூறும் அதிமுகவினர் மீதி உள்ள 20 தொகுதிகளை ஏன் விட்டுவிட்டார்கள் என்று தெரியவில்லை.
திருப்பதி கோயிலுக்கு ரூ.44 லட்சம் நன்கொடை வழங்கியது குறித்து விமர்சிக்கிறார்கள். நான் பணம் கட்டுகிறேன். ஏன் கட்டக் கூடாதா? நான் திருப்பதி கோயிலுக்கு ரு.44 லட்சம் நன்கொடை வழங்கியது குறித்து விமர்சனம் செய்பவர்கள் செய்யட்டும். விமர்சனம் செய்பவர்கள் எல்லாரும் என்னை நல்லவன் என்று சொல்வார்களா? என்றார்.