சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று மண்டல பொறுப்பாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) தேர்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து வரும் திமுக, தனது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து போராட்டம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு என பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அதனுடன் எஸ்ஐஆர் திருத்தப் பணிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க திமுக தலைமை அலுவலகத்தில் சிறப்பு உதவி மையத்தையும் அமைத்துள்ளது.
இந்நிலையில் எஸ்ஐஆர் திருத்தப்பணிகளை தீவிரமாகக் கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென 8 மண்டலப் பொறுப்பாளர்களுக்கும் திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘‘எஸ்ஐஆர் பணிகளை மண்டல பொறுப்பாளர்களான அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, எம்எல்ஏ செந்தில்பாலாஜி, துணைப் பொதுச் செயலாளர்கள் ஆ.ராசா, கனிமொழி எம்.பி.ஆகியோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதுதவிர மாவட்டச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்களுக்கு சென்னையிலும் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளுக்கு வழக்கறிஞர் குழுவால் தொகுதியிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு பயிற்சி தரப்பட்டது. இதை கண்காணிக்க மூத்தவழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் ஒவ்வொரு மண்டலத்துக்கு தனித்தனியாக 8 வழக்கறிஞர் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் எஸ்ஐஆர் செயல்படுத்தப்படும் விதம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதில் தவறுகள், முறைகேடுகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்’’ என்றனர்.
ஸ்டாலின் பதிவு: இதனிடையே ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு: எஸ்ஐஆர்-ஐ தடுப்பதே நம் கடமை. ஒருபுறம், மக்களாட்சியின் அடிப்படையான வாக்குரிமையையே பறிக்கும் எஸ்ஐஆர் எனும் ஆபத்துக்கு எதிராகச் சட்டப் போராட்டம், களப் போராட்டம். மறுபுறம் எஸ்ஐஆர் பணிகளில் குளறுபடிகளைத் தடுக்க வார்ரூம் மற்றும் உதவி எண். களப் போராட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் கூட்டணியினர். தொடர்ந்து செயலாற்றுவோம். நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம்.