சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகளில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதை கருத்தில் கொண்டுசட்டப் பேரவைத் தேர்தலுக்கு பிறகு எஸ்ஐஆர் பணிகளை செயல்படுத்த வேண்டும். அதுவரை எஸ்ஐஆர் நடவடிக்கையை நிறுத்தி வைக்கக் கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று மனு அளித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் எஸ்ஐஆர் நடத்தக்கூடாது என்று திமுக தலைமையில் 48 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 4 மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எஸ்ஐஆர் பணிகளால் குழப்பம் ஏற்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
மேலும், எஸ்ஐஆர் தொடர்பாக என்னென்ன நடைமுறை சிக்கல்கள் ஏற்படும் என்பதை தேர்தல் ஆணையத்துக்கும், மத்திய அரசுக்கும் தெரிவித்தோம். அனைத்து கட்சிகளையும் கூட்டி கோரிக்கை வைத்த போதும் கடந்த நவ.4-ம் தேதி முதல் எஸ்ஐஆர்-ஐ தேர்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ளது.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு (பிஎல்ஓ) இதை பற்றிமுழுமையாக தெரியவில்லை. அவர்களுக்கு முறையான பயிற்சியும் அளிக்கப்படவில்லை. பெரும்பாலான பிஎல்ஓக்கள் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அடிப்படை வேலையை செய்பவர்களாக உள்ளனர்.
அவர்கள், தங்கள் பணிகளை முடித்துவிட்டு 3 மணிக்கு மேல் கணக்கீட்டு படிவம் விநியோகிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். புதிதாக வாக்காளர் சேர பாரம் 6 கொடுக்க வேண்டும். ஆனால், பிஎல்ஓக்களிடம் பாரம் 6, 7, 8 ஆகியவை இல்லை. அதனால் டிச.4-ம் தேதிக்குள் கணக்கீட்டு படிவங்களை விநியோகம் செய்து அதை பெறுவது சிரமம்.
இதுதவிர 2009 மறுசீரமைப்புக்கு பிறகு பல தொகுதிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் படிவங்களை பெற்று, டிச.7-ம் தேதி மாதிரி பட்டியலை வெளியிட முடியாது.
எஸ்ஐஆர் பணிகளை 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் தான் நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதேபோல், எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிராக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக முற்போக்கு மக்கள் கட்சி செயலர் பிரபாகரன் ஆகியோரும் மனு அளித்துள்ளனர்.