கர்நாடகத்திலுள்ள மைசூரு பல்கலைக்கழகத்தின் தலித் வித்யார்த்திகலா ஒக்கூட்டா அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மனசகன்கோத்ரி பகுதியில் எஸ்சி/எஸ்டி வகுப்பினருக்கான நிதியை அரசு திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (ஜூலை 13) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் அரசைக் கடுமையாக விமர்சித்த மாணவர்கள், காங்கிரஸ் அரசு ரூ.25,000 கோடி மதிப்பிலான பட்டியலின/பழங்குடியினர் நலனுக்கான நிதியை அரசின் உத்திரவாதத் திட்டங்களுக்கான நிதித் தேவையைப் பூர்த்தி செய்ய பயன்படுத்த இருப்பதாகக் குற்றஞ்சாட்டினர்.
அவ்வாறு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பட்டியலின/பழங்குடியின மக்கள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அவர்களுக்காக முறையே பயன்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
கர்நாடக சமூக நலத்துறை சமீபத்தில் எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கானத் தகுதி மதிப்பெண்களை 60%-லிருந்து 75% ஆக உயர்த்தி அறிவித்திருந்தது. இதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கான சேர்க்கைக் கட்டணத்தில் விலக்கு அளிப்பது தொடர்பான அரசின் உத்தரவினை மாநில கல்லூரிகள் செயல்படுத்துவது குறித்து போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினர்.
தலித் மாணவர்களைக் குறிவைக்கும் பாரபட்சமான கொள்கைகளை எதிர்த்த போராட்டக்காரர்கள், தங்களது கோரிக்கைகளை அரசு கேட்காவிட்டால் போராட்டத்தைத் தீவிரப்படுத்த இருப்பதாக எச்சரித்தனர்.