எஸ்றா சற்குணம் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் | Leaders mourn the death of Ezra Sargunam

1316089.jpg
Spread the love

சென்னை: இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் (86) உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர், கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தலைவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி:

முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஈசிஐ திருச்சபையின் பேராயரும், இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவருமான எஸ்றா சற்குணம் உடல்நலக் குறைவால் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். திராவிட இயக்கக் கருத்தியலுடன் பின்னிப் பிணைந்த பேராயர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் நெருக்கமான நட்பும், அன்பும் கொண்டிருந்தவர். நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சிகளில் அவருடன் கருத்துகளைப் பரிமாறிக் கொண்ட தருணங்கள் இந்நேரத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது.

கிறித்தவ மக்களின் நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாகவும், சிறுபான்மையினரின் நலன் பாதுகாக்க தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு வந்த பேராயரின் மறைவு கிறித்தவ மக்களுக்கு மட்டுமின்றி, சமூகநீதியின் பால் அக்கறை கொண்ட அனைவருக்கும் நேர்ந்த பேரிழப்பாகும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: பேராயர் எஸ்றா சற்குணம் காலமான செய்திகேட்டு மிகுந்த துயரமும், வருத்தமும் அடைந்தேன். தமது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை, விளிம்புநிலை மக்களுக்காக உரிமைக் குரல் கொடுத்தவர். அவரது மறைவு ஈடு செய்ய முடியாதது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்ரா சற்குணம் மறைவடைந்ததை அறிந்து துயரம் அடைகிறேன். சிறுபான்மையினர் நலன் காக்க முன்வரிசையில் இணைந்து குரல் கொடுத்தவர். அவரது மறைவு சமூகநீதி இயக்கங்களுக்கு பேரிழப்பாகும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: பேராயர் எஸ்றா சற்குணம் இயற்கை எய்திய செய்தி துயரமளிக்கிறது. சிறுபான்மையினர் நலனுக்காக போராடியவர். ஜனநாயக, முற்போக்கு இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றியவர்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: பேராயர் எஸ்றா சற்குணம் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது.

மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: பேராயர் எஸ்றா சற்குணம் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். அவரை பிரிந்து வாடும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

சு.திருநாவுக்கரசர்: மத போதகராக இருந்தாலும், அரசியல் ஞானம் நிறைந்தவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *