“ஏன் கூட்டமே இல்ல?” – தஞ்சாவூரில் கொந்தளித்த பிரேமலதா | Premalatha was upset for no crowd in Thanjavur

1376696
Spread the love

திருச்சி: “எல்லா கட்சியும் எங்களுடைய நண்பர்கள்தான். கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் எங்களுக்கு நேரம் வேண்டும்’’ என்று திருச்சியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணி அருகே உள்ள அண்ணா சிலைக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது: தமிழகத்தில் திமுக, அதிமுக, தேமுதிக ஆகிய 3 கட்சிகளுக்கு தான் பூத் கமிட்டிகள் உள்ளன. உச்ச நட்சத்திரங்களுக்கு மக்கள் கூட்டம் கூடுவது இயல்புதான். விஜயகாந்துக்கும் அதிக அளவு கூட்டம் கூடியது.

தற்போது விஜய்க்கும் மக்கள் கூட்டம் கூடியது. விஜய் அந்த கூட்டத்தை முறையாக ஒழுங்குபடுத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். திமுக, பாஜகவை விஜய் எதிர்த்து வருகிறார். அதனால் அக்கட்சியினர் விஜய்யை விமர்சனம் செய்து தான் பேசுவார்கள். எல்லா கட்சியும் எங்களுடைய நண்பர்கள் தான். கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னும் எங்களுக்கு நேரம் வேண்டும். விஜயகாந்த் இல்லாமல் நாங்கள் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் எங்களுடைய கட்சி வளர்ச்சியில் தான் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஏன் கூட்டமே இல்ல? கொந்தளித்த பிரேமலதா – தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், தஞ்சாவூர் மற்றும் ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சிவனேசன் வரவேற்றார். பொருளாளர் எல்.கே.சுதீஷ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பிரேமலதா பேசியது: இந்த கூட்டம் தொடர்பான அழைப்பிதழில் எத்தனை பேருடைய பெயர்கள் உள்ளன? ஆனால், அந்த அளவுக்கு கூட்டம் இல்லை. உங்களுடைய பிசினஸ், உங்க குடும்பத்தை நீங்க எப்படி பார்க்கிறீர்களோ, அந்த மாதிரி கட்சியையும் பார்க்க வேண்டும். இப்படி ஒரு கூட்டத்துல, நான் பேசுவது இதுவே முதலும், கடைசியுமாக இருக்கட்டும்.

பதவி மட்டும் வேண்டும், வேலை செய்ய மாட்டேன் என்றால், அப்புறம் எதற்கு அந்தப் பதவி? ஆயிரம் பேர் உட்காரக் கூடிய இந்த மண்டபத்தில் 500 பேர் தான் இருக்கீங்க. இதுகுறித்து மாவட்டச் செயலாளரிடம் கேட்டால், இன்று திங்கள் கிழமை என்பதால் சிலர் வரவில்லை, வேலைக்கு சென்றுவிட்டனர் என்கிறார். அப்போது இங்கு வந்திருப்பவர்களுக்கு எல்லாம் வேலை இல்லையா? பள்ளிக்கூட மாணவர்கள் சொல்லும் காரணம் போல உள்ளது என கொந்தளித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *