`ஏன் பாரதி, என் பாரதி..!’ – மகாகவி குறித்து நெகிழ்ந்து பேசிய பாவலர் அறிவுமதி!

Spread the love

பாரதியார் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாரின் 144-வது பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம் மற்றும் இளம் பாரதி – 2025 விருது வழங்கும் விழா இன்று (11.12.2025) நடைபெற்றது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் உஷா கீர்த்திலால் மேத்தா அரங்கில் இந்த விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் இரா.இராஜவேல், துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் துர்கா சங்கர் மற்றும் திரைப்படப் பாடலாசிரியர், பாவலர் அறிவுமதி முதலான அறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

`ஏன் பாரதி… என் பாரதி” என்னும் தலைப்பில் உரையாற்றிய பாவலர் அறிவுமதி,

“நான் மட்டுமா பாடலாசிரியன்? பாரதியும் பாடலாசிரியன் தான்! அவனுக்கு இசையமைப்பாளர்கள் எல்லாம் யார் தெரியுமா? `ஏன் பாரதி, என் பாரதி’ என்ற தலைப்பில் நான் ஏன் பேச எண்ணினேன் என்றால் அவனைப்போல் மொழிக்கு உயிர் ஊட்டவும் மொழிக்கு வெளிச்சம் தரவும் யாரும் கிடையாது.

உலகிலேயே முதன்முதலாகத் தோன்றிய என் தாய்மொழி தமிழ் இருட்டில் முடங்கிக் கிடந்த அந்த வரலாற்றுச் சுரங்கத்தை உள்வாங்கித் தன் பாடலுக்கு நல்லகாலம் வருது… நல்லகாலம் வருது என்று சொன்ன குடுகுடுப்புக்காரர்களிடம் போய் உன் மெட்டுக்கு நான் பாட்டு எழுதுகிறேன் என்று சொன்னான் பாரதி. நெல்லு குத்தும் நாட்டுத் தாய்களை இசையமைப்பாளர்களாக வைத்துக் கொண்டு அதற்குத் தமிழ் செய்தவன், உழைக்கும் மக்களிடமே சந்தம் வாங்கிப் பாடினான் பாரதி.

பெரியாரையும், பாரதியையும், பாரதிதாசனையும், வள்ளலாரையும் மறந்துவிட்டால் அது தமிழாகவும் இருக்காது, தமிழனாகவும் தமிழச்சியாகவும் வாழ முடியாது.

பாரதி தன் 39 அகவை வரைதான் இவ்வுலகில் வாழ்ந்திருக்கிறான், அதற்குள் நம் தமிழுக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறான் அவன்!

தன் சுயசரிதையை எழுதுகிறான், என் வாழ்க்கையும் அவன் வாழ்க்கையும் வெவ்வேறில்லை என்று கண்ணீரை சிந்தி சிந்தி பலமுறை படித்துக் கொண்டும், உயிருக்குள் இறக்கிக் கொண்டும் இருக்கிறேன், அந்த பாரதி என்னை வழி நடத்துகிற தாயாக மாறியது அந்தச் சுயசரிதையில் இருந்துதான்” எனக் கூறி நெகிழந்தவர், மேலும் பாரதியின் வாழ்விலிருந்து குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைக் கூறி தன் உரையை நிறைவு செய்தார்.

தொடர்ந்து பல்கலைக்கழக அளவிலான கவிதை, பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு இவ்விழாவில் `இளம் பாரதி விருது’ வழங்கப்பட்டது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *