ஏப்.6-ல் தமிழகம் வரும் பிரதமரை கண்டித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு | Congress announces black flag protest against PM visit to TN on April 6

1356386.jpg
Spread the love

சென்னை: “தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை தராமல் கிராமப்புற மக்களின் வாழ்வில் விளையாடுகிறது மத்திய அரசு. இதுபோன்ற காரணங்களால் தமிழகத்துக்கு ஏப்ரல் 6-ம் தேதி வருகை தரும், பிரதமர் மோடியை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழகத்தையும், தமிழர்களையும் ஜனநாயக விரோத திட்டங்கள் மூலம் வஞ்சித்து வருகிறது.

இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை, புயல், வெள்ளம் பாதித்த தமிழகத்தின் மாவட்டங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்காதது, தமிழகத்துக்கு பள்ளிக் கல்விக்காக ஒதுக்கிய நிதியை வழங்காமல் இருப்பது, உயிர்கொல்லி நீட் தேர்வால் அன்றாடம் தற்கொலைகள் அதிகரித்து கொண்டுள்ளது, இந்த கொடிய தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்காதது, மாநில திட்டங்களுக்கு மத்திய நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவது, தமிழகத்திலிருந்து அதிகமான ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைத்த போதும் நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை வழங்காமல் இருப்பது, பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நெருக்கடியை கொடுப்பது, சென்னை மெட்ரோ 2-ம் கட்டத்துக்கான நிதியை தாமதப்படுத்துவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை, மகாத்மா காந்தி அவர்களது பெயரில் இருப்பதால் என்னவோ இத்திட்டதை முடக்க நினைக்கின்றது.

அவ்வகையில் தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.4,034 கோடியை தராமல் கிராமப்புற மக்களின் வாழ்வில் விளையாடுகிறது மத்திய அரசு.இதுபோன்ற காரணங்களால் தமிழகத்துக்கு ஏப்ரல் 6-ம் தேதி வருகை தரும், பாரத பிரதமர் மோடியை கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மாவட்ட தலைவர்கள் மற்றும் எனது தலைமையில் சென்னையில் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்”, என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *