தெலுங்கானா: யாதாதிரி புவனகிரி மாவட்டத்தில் ஏரிக்குள் கார் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 5 நண்பர்கள் பலியான நிலையில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
ஹைதராபாத்தின் எல்.பி.நகர் பகுதியைச் சேர்ந்த நண்பர்களான வம்சி (வயது 23), திக்னேஷ் (21), ஹர்ஷா (21), பாலு (19), வினய் (21) மற்றும் மணிகாந்த் (21) ஆகிய ஆறு பேரும் நேற்று நள்ளிரவு தங்களது காரில் பயணம் செய்துள்ளனர். அவர்கள் ஆறு பேரும் மது அருந்தச் சென்றதாக கூறப்படும் நிலையில், இன்று அதிகாலை யாதாதிரி புவனகிரி மாவட்டத்திலுள்ள ஜலால்பூர் எனும் கிராமத்தின் அருகில் வேகமாக வந்துக்கொண்டிருந்த பொழுது அவர்களது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த ஏரிக்குள் கவிழ்ந்துள்ளது. இதில் நீரில் மூழ்கி ஐந்து பேர் பலியானார்கள். இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகாந்த் காரின் கண்ணாடியை உடைத்து வெளியே தப்பித்துள்ளார்.
இதையும் படிக்க: தொழிலதிபர் சுட்டுக்கொலை தில்லியில் பயங்கரம்
சம்பவமறிந்து அங்கு விரைந்த போலீஸார், மணிகாந்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பொதுமக்கள் உதவியுடன் காரிலிருந்து உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பேசிய காவல்துறை உயர் அதிகாரி, இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருவதாகவும் உடற்கூராய்வுக்குப் பின்னர் ஐவரின் உடல்களும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.