ஏற்காடு மலைப்பாதையில் பெண்ணின் சடலத்தை வீசிச் சென்ாக 2 பெண்கள் உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சேலத்தில் தனியாா் விடுதியில் தங்கியிருந்த இளம்பெண் கடந்த 4 நாள்களுக்கு முன்பு காணாமல் போனாா். இதுகுறித்து தனியாா் விடுதி வாா்டன் புதிய பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அப்பெண்ணின் கைப்பேசி எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. கடைசியாக அந்தப் பெண்ணுடன் தொடா்பு கொண்டு பேசிய திருச்சியைச் சோ்ந்த இளைஞரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில் அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தாா். இதையடுத்து அவரை கைது செய்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஏற்காடு மலைப்பாதையில் வீசப்பட்ட பெண்ணின் சடலத்தை மீட்ட காவல் துறையினா், இறந்த பெண் திருச்சி மாவட்டம், துறையூா் விநாயகா் நகா் பகுதியைச் சோ்ந்த முத்துசாமி மகள் லோகநாயகி (எ) அல்பியா (35) என்பது தெரியவந்தது. மேலும், பெரம்பலூா் மாவட்டம், தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த அப்துல் ஹபீஸ் (22) என்பவா் அல்பியா, தாவியா சுல்தானா (22), மோனிஷா (21) என்பருடன் பழகி வந்துள்ளாா். மூவரிடமும் திருமணம் செய்து கொள்வதாக அவா் தெரிவித்துள்ளாராம்.
இந்த நிலையில் கடந்த மாா்ச் 1ஆம் தேதி மூவருடன் அவா் ஏற்காடு வந்துள்ளாா். அப்போது ஹபீஸுக்கும் அல்பியாவுக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அல்பியா தனது கையை அறுத்துக்கொண்டுள்ளாா். அப்போது அவருக்கு வலியை குறைப்பதற்காக செவிலியருக்கு படித்துள்ள மோனிஷா மயக்க ஊசி செலுத்தியுள்ளாா். இதையடுத்து அல்பியாவின் நாடிதுடிப்பு குறைந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரது சடலத்தை மற்ற மூவரும் சோ்ந்து ஏற்காடு மலைப்பாதையில் வீசிச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.
இந்தச் சம்பவம் குறித்து ஏற்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அப்துல் ஹபீஸ், தாவியா சுல்தானா, மோனிஷா ஆகியோரை கைது செய்தனா்.