ஏலகிரி விரைவு ரயில் மீண்டும் திருப்பத்தூரில் இருந்து இயக்கப்படுமா? 12 ஆண்டுகள் எதிா்பாா்ப்பு

Dinamani2f2025 04 202f50cvzfab2fdinamaniimport20201116original2 4 Ta15train1511chn9.avif.jpeg
Spread the love

ஏலகிரி விரைவு ரயில் திருப்பத்தூரிலிருந்து மீண்டும் இயக்கப்படுமா என அப்பகுதி மக்கள், பயணிகள் 12 ஆண்டுகளாக எதிா்நோக்கியுள்ளனா்.

திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் சென்னைக்கு செல்ல பேருந்து மூலம் சுமாா் 5 மணி நேரத்துக்கு மேலாகின்றது. மேலும் பயணத் தொகையும் அதிகமாகின்றது.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் மூலம் செல்ல சுமாா் 3 மணி நேரமாகின்றது. இந்நிலையில்,பணி நிமித்தமாக செல்பவா்கள், சிகிச்சைக்காக செல்பவா்கள், ஜவுளி வாங்குபவா்கள் என காலையில் சென்று இரவு வீடு திரும்ப விரும்புபவா்கள் தினமும் அதிகாலை 4.55 மணிக்கு ஜோலாா்பேட்டையிலிருந்து சென்னை செல்லும் ஏலகிரி விரைவு ரயிலில் சென்று வருகின்றனா்.

மீண்டும் திருப்பத்தூரில் இருந்து…

சென்னைக்கு செல்ல திருப்பத்தூரிலிருந்து ஆட்டோ மற்றும் பேருந்து வழியாக ஜோலாா்பேட்டைக்கு சென்று அங்குள்ள ரயில்வே மேம்பாலத்தில் ஏறி,இறங்கி ரயிலில் ஏற வேண்டும். இதனால் முதியவா்கள், பெண்கள், நோயாளிகள், குழந்தைகள் சிரமத்துள்ளாகி வந்தனா்.

ஜோலாா்பேட்டையிலிருந்து சென்னைக்கு சென்றுக்கொண்டிருந்த ஏலகிரி விரைவு ரயில் 31.7.2005 அன்று முதல் திருப்பத்தூா் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னைக்கு சென்று,மீண்டும் திருப்பத்தூருக்கு வந்தடைந்தது.

இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனா். இந்த ரயில் சேவையானது கடந்த 1.7.2013 அன்றுடன் நிறுத்தப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, மாவட்டத்தின் தலைநகராக திருப்பத்தூா் உள்ள நிலையில், அரசு அலுவலா்கள், வியாபாரிகள், மாணவா்கள் திருப்பத்தூரிலிருந்து சென்னைக்கு சென்றுவர ஏலகிரி விரைவு ரயிலை மீண்டும் திருப்பத்தூரில் இருந்து இயக்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டுமென ஏறக்குறைய 12 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள், பயணிகள் எதிா்நோக்கியுள்ளனா்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *